கொடுமுடி
சிவராமன்
பாடல் பெற்ற தலங்கள்-5
கொடுமுடி
தற்போது கொடுமுடி என்று அழைக்கப்படும் திருப்பாண்டிக் கொடுமுடி பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது. கொங்கு ஏழு சிவதலங்களில் புகழ் பெற்ற ஒன்று.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒரே கோயிலில் குடி கொண்டிருக்கிற தலம்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற மூன்று முத்தான நாயன்மார்களால் பாமாலைகள் சூட்டப்பட்ட திருத்தலம்.
மூன்று கோபுரங்கள், மூன்று வாயில்கள், மும்மூர்த்திகள், மூன்று கோயில்கள், மூவர் பாடிய தலம் என்பதால் இங்கு பிரார்த்தனை செய்பவர்கள் மும்மடங்கு பலன் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
கொங்கு நாட்டில் உள்ள பரிகாரத் தலங்களில் முக்கியமானது கொடுமுடி.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 213 - ஆவது சிவதலமாக விளங்கும் கொடுமுடிக்குச் சென்று வருவோம். வாருங்கள்.
திருப்பாண்டிக் கொடுமுடி
இத்தலம் கொடுமுடி, திருப்பாண்டிக் கொடுமுடி, பிரம்மபுரி, ஹரிஹரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கரைசை, அங்கவர்த்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச சேத்திரம், தென் கைலாசம் முதலான பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இறைவன்- இறைவி
இங்கு சுயம்புலிங்கமாக
அருள் பாலிக்கும் சிவபிரானின் பெயர் மகுடேசுவரர், கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தீசர், மகுடலிங்கர் என்ற திருநாமங்களும் உண்டு.
இறைவி மதுரபாஷிணி, திரிபுர சுந்தரி, பண்மொழி நாயகி, வடிவுடை நாயகி என்ற பெயர்களிலும் வணங்கப்படுகிறார்.
திருமால், பிரம்மா, அகத்தியர், பரத்துவாசர், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் வழிபட்ட திருத்தலம்.
பெயர்க் காரணம்
மேரு மலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு விழுந்ததால் அதுவே பெயராயிற்று.
பாண்டிய மன்னன் ஒருவனின் விரல் வளர்ந்து கொண்டே இருந்தது. துயர் மிகக் கொண்ட அவன் கொடுமுடியில் வந்து தரிசித்து குறை தீர்த்துக் கொண்டதாக வரலாறு. இதனால் இத்திருத்தலத்திற்கு
அங்கவர்த்தனபுரம் என்ற பெயர் வந்தது.
பிரம்மா இந்தத் தலத்திற்கு வந்து தவம் செய்து வணங்கியதால் பிரம்மபுரி என்று பெயர் வந்தது.
திருமால் பூஜித்ததால் ஹரிஹரபுரம் என்றும் கருடன் இந்தத் தலத்தின் இறைவனைப் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் பெயர் பெற்றிருக்கிறது.
கோயில் அமைப்பு
மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மூவருடைய தரிசனமும் அருளும் இங்கு ஒருசேரப் பெற்று வரலாம். சைவர்கள் மட்டுமல்ல, வைணவர்களும் ஏகாந்தமாய் வழிபடும் திருத்தலம் இது.
மகுடேஸ்வரருக்கும், வடிவுடை நாயகிக்கும், வீரநாராயணப் பெருமாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் இருக்கும். அகத்தியர் தழுவிய விரல் தழும்பு லிங்கம் மீது இருக்கும். சதுர பீடத்தில் லிங்கம் அருள் காட்சி தருகிறது.
மிகப் பழமையான ஒரு பெரிய வன்னி மரத்தடியில் பிரம்மா நான்கு கரங்களுடன், அட்சமாலை, கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார்.
வீரநாராயணப் பெருமாள் மகாலட்சுமி தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் மாட்சி கண்கொள்ளாக் காட்சி. இங்கு பெருமாளின் திருப்பாதங்களைக் கண்களால் தரிசித்துச் சேவிக்கலாம்.
இறைவன் இத்தலத்தில்
அகத்தியர் பெருமானுக்கு மணக்கோலத்தில் காட்சி அளித்ததால் மகுடேஸ்வரருக்கு வலது புறத்தில் அம்பாள் மணக்கோலத்துடன் அருட் காட்சியளிக்கிறாள்.
சித்திரை பௌர்ணமியில் பரத்துவாசருக்கு நடனக் காட்சி தந்து குஞ்சிதபாத நடராஜர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத் தாண்டவம் ஆடுவதாக இங்கு அமைந்துள்ளது மூர்த்தம். இவ்விதம் காணப்பெறுவது அரிது.
சடாமுடியுடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு விசேஷம்.
அவருக்குக் கீழ் முயலகன் வடிவமும்
சனகாதி நால்வர்களுக்குப் பதிலாக
ஒருவருடைய வடிவமும் தரிசிக்கத் தக்கதாய் உள்ளது.
உள் பிரகாரத்தில் கஜலட்சுமி, உமா மகேஸ்வரி, சுப்பிரமணியர், சரஸ்வதி, சப்த மாதாக்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர்.
கோயில் சிறப்பு
இத்தலத்தில் நடராஜர்- சிவகாமசுந்தரி சன்னதி மிக அழகு.
அம்பாள் சன்னதியில் சப்தநாதர் உருவங்கள் கல்லில் படைக்கப்பட்டுள்ளன.
சுப்பிரமணியர் சன்னதியில் சுப்பிரமணியரைத் தாங்கும் மயில்
வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையைப் பார்த்தவண்ணம் இருந்ததாகப் பழைய நூல்கள் சொல்கின்றன. ஆனால் இப்போது அந்த அமைப்பு இல்லை.
பெருமாள் சன்னதியில் ஒரு தூணில் வியாக்கிரபாத விநாயகர் காட்சியளிக்கிறார். புலியின் காலும் யானையின் முகமும் கொண்ட இந்த
விநாயகர் அபூர்வமானவர்.
ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட கோயில் என்பதால் இது நாகர் வழிபாட்டுக்கு உகந்த தலம்.
மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சனீஸ்வரர் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. ஆஞ்சநேயர் வித்தியாசமாக கோரைப் பல்லுடன் காட்சியளிக்கிறார்.
சனீஸ்வரர் சன்னதியின் எதிரே காகத்தின் சிலை இருக்கிறது. இங்கு வழிபடுதல் சிறப்பு. சனீஸ்வரர் அருளோடு சனீஸ்வர பரிகாரம் செய்து கொள்ளலாம்.
காவிரி ஆற்றங்கரையில் வேப்ப மரமும், ஆல மரமும் இணைந்திருக்கும் இடத்தில்
முழுமுதற் கடவுளான விநாயகர் அருள் பாலிக்கிறார்.
காவிரியில் நீர் எடுத்து வந்து பிள்ளையாருக்கு நீரூற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள். எத்தனை முறை நீர் எடுத்து வந்து ஊற்றுவது என்பது வேண்டுதல், பரிகாரத்தின் தன்மை, வயது எண்ணிக்கை போன்றவற்றை ஒட்டி இருக்கிறது.
செவிவழிக் கதைகள்
திருப்பாண்டிக் கொடுமுடி தொடர்புடைய சில புராணக் கதைகளும் செவி வழிக் கதைகளும் உள்ளன.
ஒருமுறை இந்திரன் சபையில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமையானவர் என்ற விவாதம் எழுந்தது. ஒரு கட்டத்தில் அது போட்டியாக விஸ்வரூபம் எடுத்தது.
போட்டிக்கான விதிமுறைகளை இந்திரன் வகுத்து நீதிதேவன் பொறுப்பேற்றார்.
பாம்பு ரூப ஆதிசேஷன் மேருமலையை இறுகச் சுற்றிக் கொண்டார். வாயு தன் வலிமையைக் காட்டி மேருவை ஆயிரம் துகள்களாக உடைத்துக் காட்டினார். அத்துகள்களில் ஒன்று ஐந்து மணிகளாக உடைபட்டுச் சிதறியது.
சிவப்பு மணி விழுந்த இடமே திருவண்ணாமலை. மரகத மணி விழுந்த இடம் திருஈங்கோய்மலை.
மாணிக்கம் விழுந்த இடம் திருவாட்போக்கி எனும் ரத்தினகிரி மலை. நீலம் விழுந்த இடம் பொதிகை மலை ஆனது.
வைரம் விழுந்த பகுதியே கொடிமுடி ஆயிற்று. அதுவே சிவலிங்கமும் ஆயிற்று.
இதனால் ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட கோயில் என்னும் சிறப்பும் கொண்டது.
புராண காலத்தில் மகுடேஸ்வரரான சிவபிரானின் திருமணத்தைக் காண படைக்கும் கடவுளான பிரம்மாவும் காக்கும் கடவுளான விஷ்ணுவும் கொடுமுடிக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
பிரம்மா தவமிருந்த கோயில்
பிரம்மா இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டு மகுடேஸ்வரரைத் தரிசித்து அருள் பெற்றதாக ஒரு செவிவழிக் கதை இருக்கிறது
புராண காலத்தில் ஒரு முறை பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் யார் பெரியவர் என்று ஒரு போட்டி எழுந்தது.
சிவபெருமான் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தார்.
விஷ்ணு பகவான் வராக ரூபத்தில் சிவனடியைத் தேடி தோண்டித் தோண்டித் தேடினார். தோல்வி கண்டார்.
பிரம்மா சிவபெருமானின் திருமுடியை அடைய வானில் உயர உயரப் பறந்தார். கண்ணுக்கு
எட்டியவரை இறைவன் தென்படவில்லை.
அப்போது வானில் இருந்து ஒரு தாழம்பூ பூமிக்கு வந்து கொண்டிருந்தது.
அதனிடம் "எங்கிருந்து வருகிறாய்?" என்று பிரம்மா கேட்டார்.
"இறைவன் திருமுடியில் இருந்து" என்று தாழம்பூ சொல்லவே பிரம்மாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.
தாழம்பூவை தான் சிவபிரானின் முடியிலிருந்து எடுத்து வந்ததாகப் பொய் சாட்சி கூறும்படி வேண்டிக் கொண்டார்.
பின்னர் இறுதியில் பிரம்மாவும் தாழம்பூவும் சொன்ன பொய் சிவபிரானுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது.
பிரம்மாவிற்கும் தாழம்பூவுக்கும் இனி எந்தக் கோயிலிலும் இடமில்லை என சாபமே கொடுத்துவிட்டார் சர்வேஸ்வரன்.
அப்போது எல்லாம் பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தன. ஒரு முகத்தைக் கொய்துவிட பைரவரிடம் ஆணையிட்டார் சிவபெருமான்.
பிரம்மா நான்முகன் ஆனார்.
பிற தெய்வங்கள் முன்பு அந்தக் கோலத்தில் இருப்பதில் தர்ம சங்கடத்திற்கும் வெட்கத்திற்கும் உள்ளான நான்முகன் பொய்யுரைத்த பாவத்தைப் போக்கிக் கொள்ள வந்த திருத்தலமே கொடுமுடி .
கொடுமுடிக் கோயிலில் இருந்த வன்னி மரத்தடியில் நீண்ட காலம் தவமிருந்ததால் மனமிரங்கிய ஈஸ்வரன் சாபத்தை நீக்கி அருள் புரிந்தார். வன்னி மரத்தடியிலேயே கோயில் அமைத்துக் கொள்ளவும் அனுக்கிரகம் செய்தார்.
விஷ்ணு வழிபட்ட தலம்
விஷ்ணு பகவானும் தன் மகனான பிரம்ம தேவரின் தவறை மன்னித்து
அருளும்படி வேண்டுதல் வைக்க கொடுமுடி வந்தார். மகுடேஸ்வரரை வேண்டி நின்றார்.
விஷ்ணுவின் வேண்டுதலும் நிறைவேற அவரும் வீரநாராயணப் பெருமாளாகக் கோயில் கொண்டார்.
இவை இரண்டும் செவி வழிக் கர்ண பரம்பரைக் கதைகள்.
புராணக் கதைகள்
தலபுராணமும் சில புராணக் கதைகளும் வேறு விதமாகக் கூறுகின்றன.
திருவண்ணாமலையில் ஆதி அருணாசலேஸ்வரர் கோயிலான
அடி அண்ணாமலைக் கோயிலில் திலோத்தமை என்ற ஆரணங்கைப் பார்த்த பிரம்மா அவள் மீது மையல் கொண்டார்.
மோகத்தில் மையம் கொண்ட அவர் திலோத்தமையை அடைய
நெருக்கமாக அணுக அவள் ஓடத் தொடங்கினாள். அவளைத் துரத்தியவாறு பிரம்மாவும் பின் தொடர்ந்தார்.
இதனைக் கண்டு கோபம் கொண்ட அருணாச்சலேஸ்வரர் பிரம்மாவைத்
தடுத்து நிறுத்தி "நீ படைக்கும் கடவுள். நீ படைத்த பெண்தான் திலோத்தமை.
நீ படைத்தவன் என்பதால் அவள் உன் மகள். மகளைப் போன்று இருப்பவளை நீ மோகித்தது தவறு. பெரும் பாவம். பரிகாரம் செய்தாலும் தீராத பாவம்."எனக் கடிந்தார்.
தன்னிலை உணர்ந்த பிரம்மா சிவபெருமானின் காலடி விழுந்து பிழையைப் பொறுத்து பாப விமோசனம் தந்து அருள் பாலிக்க வேண்டிக் கொண்டார்.
மனமிரங்கிய சிவபிரான் பிரம்மாவைக் கொடுமுடிக்குச் சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து தவம் மேற்கொள்ளச் சொன்னார். "அதன் பின்னர்தான் பாப விமோசனம் கிடைக்கும்."என்று பரிகாரம் சொன்னார்.
கொடுமுடி வந்த பிரம்மா தினமும் காவிரியில் குளித்துவிட்டு சிவ பூஜைகள் செய்தார். பின்னர் வன்னி மரத்தடியில் நீள் தவம் மேற்கொண்டார்.
இதன் பலனாகப் பாபம் நீங்கப் பெற்றார்.
பாபம் நீங்கப் பெற்ற பிரம்மா திருவண்ணாமலை சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கமே இன்றும் அடி அண்ணாமலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறது.
பாவ விமோனம் அருளிய கொடுமுடி ஆலயம் மனம் திருந்தி வந்து பிரார்த்தனை செய்பவர்களுக்கு என்றும் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறது.
விஷ்ணு பகவானுக்கும் ஒரு பாபம் எதிர்பாராத வண்ணம் வந்து சேர்ந்தது.
திருப்பாற்கடலைக் கடையும்போது அமிர்தம் வெளிப்பட்டது. தேவர்களுக்காக அந்த அமிர்தத்தை இறைவன் உருவாக்கினார்.
ஆனால் சில அசுரர்கள் தேவர்கள் போல் வடிவெடுத்துக் கொண்டு அமிர்தத்தை எடுத்துச் செல்ல விரும்பினர். அவர்களில் ஓர் அசுரன் அமிர்தத்தை அவ்விடத்திலேயே பருகவும் தொடங்கினான்.
இதைக் கவனித்த விஷ்ணு பகவான் கோபம் கொண்டு தன் சக்கரத்தை ஏவி அவனின் உடலை மேலே தலை கீழே உடம்பு என்று இரண்டு துண்டுகளாக்கிக் கொன்றுவிட்டார். அந்த இரண்டு துண்டுகளே ராகுவும் கேதுவுமாக உருப்பெற்றன.
இதனால் எழுந்த பாபத்தை நீக்கித் கொள்ள இறைவன் தெரிந்தெடுத்த தலமே கொடுமுடி .
விஷ்ணு பகவான் கொடுமுடிக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்து தோஷம் நீக்கப்பெற்றார்.
இறைவனைத் தரிசித்த கையோடு மகிழ்ச்சியின் உச்சத்தில் இங்கே வீரநாராயணப் பெருமாளாகக் கோயில் கொண்டார்.
இந்தப் புராண சம்பவம் காரணமாக எப்பேர்ப்பட்டவர்களாய் இருப்பினும் எப்பேர்ப்பட்ட சாபங்களாக இருப்பினும் சாபம் நீக்கும் தலமாக கொடுமுடி விளங்கி வருகிறது.
தலவிருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம்
வன்னி மரம். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த வன்னி மரம்.
இம்மரத்தில் ஒருபுறக் கிளைகள் முற்களுடனும் மறுபுறம் முட்கள் இல்லாமலும் காணப்படுகிறது. இம்மரம் பூக்காமல், காய்க்காமல் தெய்வீகத் தன்மை கொண்டதாகத் திகழ்கிறது.
வன்னி மரத்தடியில் நான்முகன் பிரம்மா மூன்று முகத்துடன் அருள் பாலிக்கிறார். அவரது நான்காவது முகமாக வன்னி மரமே திருக்காட்சி அளிக்கிறது.
பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 முறை, 24 முறை, 48 முறை,108 முறை என பக்தர்கள் தங்கள் விருப்பப்படியோ அல்லது வேண்டியிருந்தபடியோ சுற்றி வந்து வணங்குகிறார்கள். சிலர் தங்கள் வயது எண்ணிக்கைப்படி சுற்றிப் பிரார்த்திக்கிறார்கள்.
உடல், மனம், ஆன்மா புத்தாக்கம் பெற இத் தல விருட்சத்தை அர்ப்பணிப்போடு சுற்றுவது நல்லது.
திங்கள், வியாழன், சனி, அமாவாசை, தசமி ஆகிய நாட்களில் வன்னி மரம் சுற்றி வணங்குவது வேண்டுவன தரும்.
கொடுமுடி தொடங்கி பழனிக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கள் தீர்த்தக்கலசத்தில் வன்னி இலைகளைப் போட்டு எடுத்துச் செல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. குலதெய்வ வழிபாடு செய்பவர்களும் இதே மாதிரி தீர்த்தக் குடத்தில் வன்னி மர இலைகளைப் போட்டுக்கொண்டு
செல்கிறார்கள்.
அகத்தியர் பாறை
கொடிமுடி திருக்கோயிலின் முன்புறம் அகன்ற காவிரி கருணையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
கோயிலின் எதிர்ப்புறம் மறு கரையில் அகத்தியர் பாறை என்ற அருள் நிறை பாறை உள்ளது.
ஒரு காலத்தில் காவிரி நதிக்கு அகந்தை ஏற்பட்டது. ரிஷிகளும் முனிவர்களும் சிவனடியார்களும் தன்னிடம் வந்து நீராடிச் செல்வதால் ஏற்பட்ட மமதை அது.
அகத்தியர் பெருமான் கொடுமுடிக்கு வந்தபோது காவிரி நதியின் அகந்தையைக் கண்ட அவருக்குக் கோபம் ஏற்பட்டது.
காவிரியின் அகந்தையை அழிக்க
நினைத்த அகத்தியர் அக்கணமே காவிரி நீரைத் தனது கமண்டலத்தில் அடைத்து பாறை மீது உட்கார்ந்து தவத்தில் ஆழ்ந்து விட்டார்.
காவிரியில் நீர் இல்லாமல் போனதால் விவசாயம் பாழ்பட்டு உணவுப் பஞ்சம் தலை விரித்தாடி நாடும் மக்களும் அவதிக்கு உள்ளாயினர். அவர்கள் முழுமுதற் கடவுளான விநாயகரிடம் முறையிட்டு அழுதனர்.
மனமிரங்கிய விநாயகர் பெருமான் காக வடிவம் எடுத்து வந்து, அகத்தியரின் கமண்டலத்தைத்
தட்டிவிட காவிரி நீர் வழிந்தோடி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கமண்டலத்திலிருந்து காவிரி பெருகிய பகுதியில் இருந்துதான் அதுவரை தென்திசை பாய்ந்து வந்த நதி கிழக்கு நோக்கித் திரும்பி சோழநாடு செல்கிறது.
கமண்டலத்தைத் தட்டிவிட்டு உலகை உயிர்ப்பித்த காகம் அங்கிருந்து பறந்து வந்து மகுடேஸ்வரர் கோயிலினுள் நுழைந்து அங்கு அருளபாலிக்கும் காவிரி கண்ட விநாயகர் சன்னதியில் சென்று மறைந்து போனது.
இந்த இறைச் சம்பவம் அகத்தியர் பாறையிலும் கொடுமுடி கோயில் தூண் ஒன்றிலும் வடிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புராணக்கதை.
அகத்தியருக்கும் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மகுடேஸ்வரருக்கும் நெருக்கம் அதிகம். அன்பெனும் பிடியில் அகப்படும் லிங்கேஸ்வரர் அகத்தியரின் அன்புக்கும் அரவணைப்பிற்கும் கட்டுப்படுவார்.
காவிரியில் வெள்ளம் வரும் போதெல்லாம் வெள்ளம் கோயிலைச் சூழும். பல சமயங்களில் மூலவரான சிவலிங்கத்தை மூழ்கடித்து விடும்.
அப்படி நேரும்போதெல்லாம் அகத்தியர் பிரான் ஓடி வந்து லிங்கத்தைக் கைகளால் தூக்கி அரவணைத்துக் கொள்வார்.
வெள்ளம் வடிந்ததும் லிங்கத்தை பீடத்தில் அமர வைத்துவிட்டு அகமகிழ்ச்சியோடு திரும்புவார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து லிங்கத்தின் மீது ஏற்பட்ட அகத்தியரின் கைவிரல் தழும்பை இன்றும் காண முடியும்.
தீர்த்தங்கள்
தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரத்துவாச தீர்த்தம், காவிரி நதி
ஆகிய நான்கு தீர்த்தங்கள் உள்ளன.
வன்னி மரம் அருகில் தேவ தீர்த்தமும், மடப்பள்ளி அருகே பிரம்ம தீர்த்தமும், நவகிரகக் கோயில் அருகே பரத்துவாச தீர்த்தமும் உள்ளன.
பிரம்ம தீர்த்தம் வாழ்க்கையில் குரு அருள், கல்விப் பற்று, ஞானம், வாக்கு வன்மை, ஆயுள் விருத்தி ஆகியன தரும் என்பது நம்பிக்கை.
காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு இணையானது என்று சேது புராணம் கூறுகிறது.
ஐப்பசி மாதத்தில் காவிரியில் புனித நீராடுதலைத் 'துலா ஸ்நானம்' என்பார்கள். இங்கு காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பானது.
பரத்துவாச தீர்த்தம் உருவானது குறித்து ஒரு புராணக் கதை இருக்கிறது.
வேத மந்திரங்களைக் கசடறக் கற்ற
பரத்துவாசர் தன் சீடர்களுக்குக் கற்றுத் தந்தார். பல உபாயங்களைச் சொல்லித் தந்தார்.
அவரிடம் கற்றுக் கொள்ள அசுரர்களும் போலி வேடத்தில் வந்தனர். கற்றுணறும்போதே வேதங்களையும் மந்திரங்களையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
இதனைக் கண்டு வெகுண்ட பரத்துவாச முனிவர் தனது தண்டத்தை ஏவி அவர்களைக் கொன்றொழித்தார்.
இதனால் ஏற்பட்ட பாபம் நீங்க
அவர் பரிகாரம் செய்ய வந்த இடமே
கொடுமுடி திருத்தலம்.
இங்கு அதற்காகவே ஒரு தீர்த்தம் அமைத்து நீராடி பரிகாரம் செய்து இறை தொழுது பாபம் நீங்கப் பெற்றார்.
அவர் உருவாக்கிய தீர்த்தமே பரத்துவாச தீர்த்தம்.
மூவர் பாடல் பெற்ற தலம்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் பாடிய ஒரே தலம் என்ற பெருமை கொண்டது கொடுமுடி .
சுந்தரமூர்த்தி நாயனார் 'நமசிவாய திருப்பதிகம்' இங்குதான் பாடியருளினார்.
பரிகாரத் தலம்
காவிரி நதியில் நீராடி விட்டு, தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரத்துவாச தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களில் நீராடி
மும்மூர்த்திகளையும் அம்பாளையும்
தொழுதால் முற்பிறப்புத் தீவினைகள் அகன்று இப்பிறப்புப் பாபங்களும் நீங்கும்.
புதுமணத் தம்பதிகள் திருமணம் முடித்த கையோடு இங்கு வந்து மும்மூர்த்திகளை வழிபடுவது வழக்கமாய் உள்ளது. மணமக்கள் மணவாழ்க்கை சிறப்பாக அமைய கொடுமுடி வந்து பிரார்த்தித்து விட்டு புது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
60 -ஆவது திருமண வழிபாட்டிற்கு உகந்த தலம். ஆயுள் ஹோமம், தொழில் அபிவிருத்தி ஹோமம் போன்றவற்றை இங்கு பக்தர்கள் மேற்கொள்கிறார்கள்.
ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், திருமணத் தடை, குழந்தைப் பேறு, களத்திர தோஷம், குடும்ப தோஷம், ஸ்திரீ தோஷம், பிராமண தோஷம் உள்ளிட்ட எல்லா தோஷங்களுக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது கொடுமுடி .
அஸ்தி கரைத்தல், முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல் இங்கு சிறப்பு.
மகாளய அமாவாசை அன்று இங்கு தர்ப்பணம் கொடுப்போர் மிக அதிகம்.
திருவிழாக்கள்
சித்திரைத் திருவிழா, ஆடி 18, திருவாதிரைத் திருநாள், தை அமாவாசை, சஷ்டி, சூரசம்ஹாரம், கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம் முதலானவை முக்கியத் திருவிழா நாட்கள்.
ஆடி 18 அன்று மும்மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளுவதாகத் தொன் நம்பிக்கை.
அன்றைய இரவில் பச்சை மண்ணில்
தாலி செய்து அதில் மயிலிறகு போட்டு, விளக்கு, காரை, காதோலை, கருகமணி, சிற்றாடை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து
ஆற்றில் விட்டு பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
நந்தி தேவாரம்
ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீட நிறுவனர் சற்குரு சித்தகுருஜி நந்தி ஜீவநாடி வாயிலாக திருப்பாண்டிக் கொடுமுடி குறித்து நந்தி தேவாரம் அருளியுள்ளார்.
வெண்ணிறத்து நுரை புரள மேனி போர்த்த காவிரி
மண்தழுவ கரை பொங்கும் மா பாண்டி கொடுமுடியில்
விண்ணிறை தேவர் தொழும் திருமாலும் பிரமாவும்
கண்மறைத்து செய்தபழி தீரவழி கண்ட இடம்
தண்ணிறைந்த மலர் சோலை அமர்ந்த மகுடேஸ்வரரும்
எண்ணிறந்த பிறவி பவம் அறுப்பார் அடிதொழவே.
அமைவிடம்
ஈரோடு கரூர் சாலையில் கரூரிலிருந்து 25-ஆவது கி.மீட்டரில் திருக்கோயில் உள்ளது.
கரூர் ஈரோடு சாலையில் ஈரோட்டிலிருந்து 40- ஆவது கி.மீட்டரில் உள்ளது.
பேருந்து வசதிகளும் ரயில் வசதிகளும் உள்ளன.
விமான நிலையம்/இரயில் நிலையம்
கோவை விமான நிலையம்
கொடுமுடி இரயில் நிலையம்
கூகுள் மேப் வழிகாட்டி
முகவரி
அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்,
கொடுமுடி - 638151
ஈரோடு மாவட்டம்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
🙏
ReplyDelete