வெஞ்சமாக்கூடல்
சிவராமன்
தேவாரப் பாடல் பெற்ற 'கொங்கு ஏழு' சிவ தலங்களில் ஒன்று 'வெஞ்சமாக்கூடல்' எனும் 'வெஞ்சமாங்கூடலூர்'.
தேவர்களின் தலைவன் இந்திரனும், சமயக்குரவர் நால்வரில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரும், பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழாரும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும், இராமலிங்க அடிகளும், திருப்பதி சுவாமிகளும், திருமுருக கிருபானந்த வாரியாரும் வழிபட்ட திருத்தலம் வெஞ்சமாங்கூடலூர்.
இறையருளும் ஆன்மிக எழில் அமைப்பும் நிரம்பப் பெற்றிருக்கிற வெஞ்சமாங்கூடலூர் திருத்தலத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று வழிபடுதல் மானிடப் பிறவியின் இறைக் கடமைகளில் தலையானது.
வாருங்கள், இறைவன் கல்யாண விகிர்தீஸ்வரரையும், இறைவி பண்ணேர் மொழியம்மையையும் வணங்கிப் பிறவிப் பயனடைவோம்.
கொங்கு நாடு
கொங்கு என்பதற்குத் தேன் என்று பொருள். தேன் கிடைத்த நாடு என்பதால் கொங்கு நாடு எனப் பெயர் கொண்டது.
தமிழர்களின் தங்க காலமான சங்க காலத்திலேயே கொங்கு நாடு தனி நாடாகச் சிறப்புப் பெற்றிருந்தது.
அக்காலக் கொங்கு நாடு 24 நாட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் வெங்கால நாடு ஒன்று. அந்நாட்டின் ஒரு பகுதியே வெஞ்சமாங்கூடலூர்.
வெஞ்சமாங்கூடலூர்
தமிழகத்தின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலம் துவங்கிய காலகட்டத்தில் சைவம் குன்றி சமணம் வளரத் தொடங்கியது.
சேர, சோழ, பாண்டியர்களை களப்பிரர்கள் வென்ற நிலையில் சைவம் மேன்மை கொள்ள அரசாட்சி செய்து கொண்டிருந்த வேடுவ மன்னன் வெஞ்சமனுடன் களப்பிரர்கள் போரிட்டனர்.
களப்பிரர்கள் சமணர்களாக இருக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே நடந்த இந்த சைவ சமணப் போரில் வெஞ்சமன் வென்று களப்பிரர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்பது வரலாற்றுச் செய்தி.
வீரமும், விவேகமும், சிவபக்தியும் நிரம்பக் கொண்டிருந்த 'வெஞ்சமன்' என்ற மன்னன் நல்லாட்சி செய்த காரணத்தால் இந்நகருக்கு வெஞ்சமன் நினவாக இப்பெயர் அமைந்தது.
அமராவதி நதியின் கிளை ஆறான குடகனாற்றுடன் சிற்றாறு என்னும் குழவனாறு கூடும் இடத்தில் அமைந்த அழகிய நாடாகையால் கூடல் என்ற பெயர் இணைந்தது.
இவ்வூருக்கு வெஞ்சை மாநகர், இறைவனான விகிர்தீஸ்வரர்
திருநாமத்தை ஒட்டி விகிர்த மாநகர், விகிருதையம் பேரூர் என்ற பெயர்களும் இருந்து வந்திருக்கிறது.
கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்
வெஞ்சமாங்கூடலூரில் அரசன் வெஞ்சமன் சிவ சிந்தனையுடன் நிர்மாணித்து சிறப்பாகப் பூஜைகள் செய்து வந்த கல்யாண விகிர்தீஸ்வரர் ஆலயம் குடகனாற்றின் கீழ்க்கரையில் இறையாற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் காட்சியளிக்கிறது.
இத்திருகோயிலின் இறைவனாக கல்யாண விகிர்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இறைவியின் திருநாமம் பண்ணேர் மொழியம்மை.
'விகிர்தீஸ்வரர்' என்றால் 'நன்மை தருபவர்' என்று பொருள். இனிமையாக இசை போல் மொழி பேசி அருள் தருபவள் இறைவி பண்ணேர் மொழியம்மை.
விகிர்தீஸ்வரருக்கு விகிர்த நாதேஸ்வரர், கல்யாண விகிர்தீஸ்வரர்
ஆகிய பெயர்களும் உண்டு.
இறைவி விகிர்த நாயகி, விகிர்தேஸ்வரி, விகிர்த நாதேஸ்வரி, வடமொழிப் பெயரான மதுரபாஷினி ஆகிய திருநாமங்களில் வணங்கப்படுகிறாள்.
இத்தல முருகனைப் போற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் செவிக்கும் மனத்திற்கும் இனியன. அந்த வகையில் 'திருப்புகழ்த் தலம்' என்ற பெருமையும் கொண்டது இத்தலம்.
புராணக்கதை
அகலிகை கௌதம மகரிஷியின் ரிஷி பத்தினி. வைராக்கியம் மிக்க முனிவர்களையும் கிறங்கடிக்கும் அழகிய ஆரணங்கு.
தேவாதி தேவன் இந்திரன் அகலிகை மீது ஆசை கொண்டான். பல வகையில் முயற்சித்தும் தோல்வி கண்டான். எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று சூழ்ச்சியில் இறங்கினான்.
கௌதம மகரிஷி அதிகாலை சேவலின் கூவலைக் கேட்டு விழித்தெழுந்து ஆற்றங்கரை சென்று நீராடி, இறை தொழுது, பூஜை புனஸ்காரங்கள் முடித்து அன்றையப் பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
ஒரு நாள் இந்திரன் சேவல் போல கூவி கௌதமரை ஆற்றங்கரைக்கு அனுப்பி வைத்தான். அதே சமயத்தில் அவன் பர்ணசாலைக்குள் கௌதமர் ரூபத்தில் நுழைந்து அகலிகையை நெருங்கினான்.
சந்தேகத்துடன் அகலிகை கேட்டாள். "ஏன் சுவாமி..உடனே திரும்பி விட்டீர்கள்?"
"ஆற்றங்கரைக்குச் செல்லத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் காமம் கரை புரண்டு விட்டது. காமத்தோடு இறை பணி தொடங்குவது நன்றல்லவே. அதனால் திரும்பி விட்டேன்" என்றார் கௌதமர்.
கணவனின் மோகத்தைத் தீர்த்து வைப்பது கற்புடைய நல்லாளின் கடமை தானே?
அகலிகை அக்கணமே கௌதம ரூப இந்திரனுடன் சல்லாபிக்கத் தொடங்கினாள். அந்த நேரம் ஓர் உண்மைச் சேவல் உரத்துக் கூவிற்று. கௌதமர் தன் தவ ஆற்றலால் நடந்ததை எல்லாம் உணர்ந்து முகம் சிவக்க தவச்சாலைக்கு விரைந்தார்.
வீட்டினுள் நுழைந்தவருக்கு தென்பட்ட காட்சி கோபத்தீயை மேலும் மூட்டியது. தாங்கொணா தீ வார்த்தைகளில் சாபங்கள் வெளிப்பட்டன.
அகலிகையைக் "கல்லாய்ப் போ" எனச் சாபமிட்டார். கணவன் அல்லாதவனின் ஸ்பரிசத்தை உணராததற்கும், ஒருக்கால் கல்போல் இருந்திருப்பாளோ என்பதற்காகவும் விட்ட சாபம் அது. அகலிகை கல்லானாள்.
பூனை வேடத்தில் தப்பிக்க நினைத்த இந்திரனைப் பார்த்த மாத்திரத்தில் பீறிட்ட கோபத்தில் 'எதைக் காண வந்தாயோ உடலெங்கும் அப்படியே ஆகுக' எனச் சாபம் விட்டார்.
இந்திரன் உடல் எங்கும் யோனிக் கண்கள் உருவாயின. வெளியே தலை காட்ட முடியாத நிலைக்குப் போன இந்திரன் வெட்கித்துக் கூனிக் குறுகி சாபம் நீங்கப் பெற வந்து வழிபட்ட திருத்தலமே வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில்.
இறைவன் கோபப்பட்டாலும் மன்னித்து, கருணையோடு இந்திரனின் துயர் நீக்கினார். கௌதமரின் சாபத்தை நீக்கி சாபம் நீங்கப் பெறச் செய்தார்.
இந்திரனின் சாபம் நீங்கப் பெற்ற திருக்கோயில் என்ற மகத்துவம் கொண்டது கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்.
இது ஒரு கர்ண பரம்பரைக் கதை. தலபுராணத்தில் இல்லை என்றாலும்
காலம் காலமாய் நம்பப்படும் கதை.
எனவே, எத்தகைய சாபம் இருந்தாலும் அதைப் போக்க வல்லவர் இறைவன் விகிர்தீஸ்வரர் என்பது தொன் நம்பிக்கை.
பாடல் பெற்ற திருத்தலம்
சுந்தரர் மூன்று முறை கொங்கு நாட்டிற்குத் தனது தேச சஞ்சாரத்தின் போது சிவ தரிசனத்திற்காக வந்திருக்கிறார். அதில் முதல் முறையே வெஞ்சமாங்கூடலூர் வருகை தந்து சிவபிரானைத் தரிசித்துப் புகழ்ந்து பாடல்கள் பாடி இருக்கிறார்.
பதிலாகப் பரிசில் தர அது சமயம் சிவனிடம் ஏதுமில்லை. சுந்தரரோ விடுவதாக இல்லை. பொன்னும் பொருளும் பெறாமல்
நகர்வதாயில்லை.
திருவிளையாடல் நாயகன் பார்வதியை ஒரு கிழவி வேடத்தில் வரச் செய்தார். அவரும் கிழ வேடத்தில் அங்கு வருகை புரிந்தார். சுந்தரருக்குப் பரிசுகள் தருவதற்காகத் தன் மகன்களான குழந்தை வடிவ விநாயகரையும் முருகனையும் கிழவி வடிவிலிருந்த பார்வதி தேவியிடம் ஈடாகக் கொடுத்து பொருள்கள் பெற்று அவற்றை
சுந்தரருக்குக் கொடுத்து மகிழ்ந்தார் சிவபெருமான்.
பரிசில் பெற்ற சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு தேவாரப் பதிகம் பாடினார்.
இந்த வகையில் இத்திருத்தலம் பாடல் பெற்ற திருத்தலமாகி நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வரங்களை அள்ளி அள்ளி வழங்கி வருகிறது.
கோயில் அமைப்பு
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் பிரம்மாண்டமாக உள்ளது.
கொங்கு மண்டலத்திற்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் முன்புறம் உள்ளது.
ஊர் மேட்டில் இருந்தாலும் கோயில் பள்ளத்தில் கலச கும்பம் கண் மட்டத்தில் தெரியும் வண்ணம் உள்ளது. ராஜகோபுரத்தில் இருந்து 18 படிகள் இறங்கினால்தான் கோயிலினுள் சென்று தெய்வங்களைத் தரிசிக்க முடியும்.
நுழைவாயிலின் இடதுபுறத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரின் சுதைச் சிற்பமும், வலதுபுறத்தில் அருணகிரிநாதர் சுதைச் சிற்பமும் வெஞ்சமாங்கூடலூர் திருப்பதிகக் கல்வெட்டும் உள்ளது.
கருவறையில் விகிர்தீஸ்வரர் நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதியின் வாயிற் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்களின் எழிலும் மூர்த்தங்களும் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு இனிய இக்கதவுகள் தரிசிக்கத்தக்கவை.
இறைவி பண்ணேர் மொழியம்மை நின்ற கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறாள்.
வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மயிலின் மீது கால் வைத்த நிலையில் காட்சியளிப்பது ஏகாந்தமாய் உள்ளது.
பொதுவாக சிவன் கோவிலில் உள்ள பைரவர், தனிச் சன்னதியில் சனீஸ்வரர், கோஷ்ட மூர்த்தங்களான தட்சணாமூர்த்தி, துர்கை அம்மன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களின் சிற்பங்களும் தரிசிக்க வேண்டியவை.
தலவிருட்சம்
இத்திருக்கோயிலின் தல விருட்சம் வில்வம்.
தீர்த்தம்
குடகனாறு, விகிர்த தீர்த்தம்
பரிகாரம்
பரிகாரம்
வெஞ்சமாங்கூடலூர் ஒரு பரிகாரத் தலமும் கூட.
இந்திரன் சாபம் நீங்கப் பெற்றதால் சகல விதமான சாபங்கள், குறிப்பாக பெண் சாபம் நீங்கப் பெற பக்த கோடிகள் இங்கு விகிர்தீஸ்வரருக்குப் பிரத்தியேக அர்ச்சனைகள் செய்கிறார்கள்.
திருமண தோஷத்திற்கும் அர்ச்சனைகள் செய்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் மூன்று மாலைகள் கொண்டு வந்து இறைவன் விகிர்தீஸ்வரருக்கு இரண்டு மாலைகளும், இறைவிக்கு ஒரு மாலையும் அணிவித்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இறைவனுக்கு அணிவித்த இரண்டு மாலைகளில் ஒரு மாலையைத் திரும்பப் பெற்று திருமணம் வேண்டும் ஆணோ, பெண்ணோ அணிந்து கொண்டு வீடு திரும்பி அந்த மாலையைப் பாதுகாத்து வருகின்றனர்.
திருமணம் கூடியவுடன் அம்மாலையைக் கோயிலுக்குக் கொண்டு வந்து ஒருபுறம் வைத்துவிட்டு இறைவனுக்கு மகிழ்ச்சியோடு அர்ச்சனை செய்கின்றனர்.
வேண்டும் வரம் நிறைவேறினால் பக்தர்கள் அம்பாளுக்குப் பாலாபிஷேகம் செய்து வணங்குகிறார்கள்.
இறைவனுக்கும், இறைவிக்கும் திருக்கல்யாணம் செய்வித்தும் நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
தலச்சிறப்பு
திருக்கோயிலுக்கு வந்து இறைவனைத் தரிசித்து விட்டுத் திரும்பும் போது 18 படிகளில் ஏறித்தான் மேலே செல்ல வேண்டும். இவ்விதமாக ஏறுமுகமாகச் செல்வதால் சகல துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.
திருவிழாக்கள்
மார்கழி ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மாசி மகத் திருவிழா, மகா சிவராத்திரி முதலியன முக்கிய திருவிழாக்கள்.
கும்பாபிஷேகம்
1977 ஆம் ஆண்டு குடகனாற்றில் பெரும் வெள்ளம் வந்ததால் கோயில் பெரும் சிதிலமடைந்தது. சுமார் 2 கிலோ மீட்டர் வரை சிற்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஈரோடு அறநெறித் திருக்கூட்டம் அறுபத்து மூவர் விழாக் குழு, கோவை சிரவை ஆதீனம் தவத்திரு சுந்தர சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகிய பெரியோர்களும், சமயச் சான்றோர் பலரும் பெரும் முயற்சி செய்து கோயிலைப் புனரமைத்து 1986 இல் குடமுழுக்குத் திருப்பணிகள் செய்தும் திருக்கோயிலை மெருகூட்டியும் தற்போது இருக்கும் நிலைக்கு அமைத்துத் தந்துள்ளனர்.
கரூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களின் அருகில் உள்ளது வெஞ்சமாங்கூடலூர்.
கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ பயணித்து ஆறு ரோடு பிரிவில் 8 கி.மீ உள் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
நந்தி தேவாரம்
ஸ்ரீ நந்தியெம்பெருமான் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம் சுவாமி சித்தகுருஜி வாயிலாக அருளியுள்ள வெஞ்சமாங்கூடல் நந்தி தேவாரம் பக்தித் தேனாகப் பாய்கிறது.
கண்ணாயிரம் கொண்டு கண்டு கைதொழுது
பண்ணாயிரம் கொண்டு பாடி பாதம் பற்ற
முன்னாயிரம் வினை அழித்து பதம் அருளும்
விண்ணாயிரத் தேவர் வேண்ட வரம் ஈந்த
பண்ணேர் மொழியம்மை பாதியுடல் கொண்ட
மண்ணோர் இடம் வெஞ்சமாக்கூடல் விகிர்தீசா.
கூகுள் மேப் வழிகாட்டி
அருகிலிருக்கும் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம்
திருச்சி விமான நிலையம்
கரூர் இரயில் நிலையம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஓம் நமசிவாய🙏
முகவரி
ஸ்ரீ கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர்
கரூர் மாவட்டம் - 639109
தமிழ்நாடு.
திருச்சி விமான நிலையம்
கரூர் இரயில் நிலையம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஓம் நமசிவாய🙏
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
பேராசிரியர் M. R. ராஜசேகர தங்கமணி
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
ஆஹா அருமையான சிறப்புக்கள் மிக்க இக்கோயிலின் ஸ்தல வரலாறு அறியப் பெற்று சிவகதி மேன்மையுற்றோம் திருச்சிற்றம்பலம் சிவ.நாகேந்திரகிருஷ்ணன் பழனியிலிருந்து
ReplyDelete