கரூர் ஆனிலையப்பர்


                                                                                                                                  
மாரிமைந்தன்
சிவராமன்

பாடல் பெற்ற தலங்கள்-6

கரூர் ஆனிலையப்பர்

'ஆதிகருவூர் அதிவெஞ்சமா கூடல் நீதன்
கொடுமுடி மேல்நீர் நணா - மேதினியில்
நாதன் அவிநாசிநன் முருகன் பூண்டி 
திருச்சோதி செங்கோடெனவே சொல்'

என்பது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல்.

கொங்கு ஏழு  சிவ தலங்களில் முதன்மையான  கரூர் அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனிருக்கும் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலைத் தரிசித்து அருள் பெறுவோம் வாருங்கள்.

கருவூர் சிறப்பு

கரூர் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் கருவூரின் சிறப்புகள் மகத்தானவை.

கரூருக்கு  ஆதிபுரம், வஞ்சிமாநகர், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், வஞ்சுளாரண்யம், ஷண்மங்கல சேத்திரம், கர்ப்பபுரி, காபுரம், கருவைப் பதி, முடி வழங்கு சோழபுரம், ஆதிமாபுரம் முதலான பெயர்கள் இருந்து வந்துள்ளது.

சோழர்களின் தலைநகராக வஞ்சிமாநகர் என்ற பெயரில் இருந்ததால் வஞ்சிமாநகர் என்றும், உலகில் முதலில் தோன்றியமையால் ஆதிபுரம் என்றும், பெருமாள் பள்ளி கொண்ட ஊராகையால் பாஸ்கரபுரம் என்றும், சோழர்களால் வெல்லப்பட்ட காலத்தே வீரசோழபுரம் என்றும், வஞ்சி மரங்கள் செறிந்திருந்தமையால் வஞ்சுளாரண்யம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது கரூர்.

மலை, காடு, ஆறு, தீர்த்தம்,  நகரம், கோயில் என்னும் ஆறு மங்கலப் பொருட்கள் கொண்டிருப்பதால் ஷண்மங்கள சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மாவின் படைப்பில் முதன் முதலில் கரு உருவானதால் கர்ப்பபுரி  என்றும்,  'ஆ' (காமதேனு) வழிபட்டதால் ஆனிலை என்றும் போற்றப்படுகிறது.

கற்பங்கள் தோறும் பசுபதிநாதர் வெளிப்பட்டு மூன்று சக்திகளை நெறிப்படுத்தியும் , தோன்றிய யாவற்றையும் தன்னுள் மறைத்து மீண்டும் வெளிப்படுத்துவதாலும் காபுரம் எனப் பெயர் பெற்றுள்ளது.

கரூர் ஆனிலையப்பர் திருக்கோயில்

ஆனிலையப்பர் திருக்கோயில்

ஊரின் பெயர் கரூர் என்று இருந்தாலும் கோயிலின் பெயர் ஆனிலையப்பர் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

கரூர் ஆனிலையப்பர்  திருக்கோயில் என்பதே கோயிலின் முழுப் பெயர். கல்யாண பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில் என்றும் போற்றி வணங்கப்படுகிறது.

'ஆ' என்பதற்கு ஆன்மா என்றும் பொருள் கொள்ளலாம். அந்த வகையில் ஆன்மாக்கள் நிலைகொள்ளும் இடம் என்றும் கருதப்படுகிறது.

இறைவனும் இறைவியும்

இறைவனின் திருநாமங்கள் ஆனிலையப்பர், பசுபதீஸ்வரர்.

கல்யாண பசுபதீசுவரர்

இறைவி இருவர். கிருபாநாயகி என்னும் அலங்காரவல்லி, வடிவுடையாள் என்னும் சௌந்தரநாயகி.

அருள்மிகு சௌந்தரநாயகி

அருள்மிகு அலங்காரவல்லி

வழிபட்டவர்கள்

விநாயகர், முருகன், நவகிரகங்கள், எண் திசை பாலகர்கள், சுக்கிரன், அலைமகள், மலைமகள், பிரம்மா, காமதேனு, சூரியன், அகத்தியர், கருவூரார், வியாசர், கோபிதாரன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், புகழ்ச்சோழ நாயனார், எறிபத்த நாயனார், அருணகிரிநாதர், முசுகுந்த சக்கரவர்த்தி, திருமுருக கிருபானந்த வாரியார் முதலானோர்.

தலவிருட்சம்

முல்லை, வஞ்சி (அசோகம்), வில்வ மரம் ஆகிய மூன்றும் இக்கோயிலின் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.

திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ள வில்வ மரத்தின் கீழ் நாகர்கள் நிறுவப்பட்டுள்ளனர். இங்கு வழிபடுதல் விசேஷம்.

ராகு கேது மற்றும் நாகர்கள்

தீர்த்தம்

ஆம்பிராவதி (அமராவதி நதி), பிரம்ம தீர்த்தம். தாடகை தீர்த்தம், அசுர தீர்த்தம், தேனு தீர்த்தம், முருக தீர்த்தம்.

அம்மையின் திருவருளே நதியாக உருவெடுத்ததால் அம்பா நதி என்று உருவானது. பல முனிவர்கள் மாமரங்களாக மாறி தவம் இயற்றி நிற்க, அந்நிழவில் தவழ்ந்து வருவதால் ஆம்பிரமா நதி என்றும் பெயர் பெற்றது. காமதேனு கருவூரை அடைவதற்கு முன்பே இரு மருங்கிலுமுள்ள பல திருத்தலங்களை வழிபட்டதால் ஆன்பொருணை என்ற பெயரும் சேர்ந்தது.

காலப்போக்கில் ஆம்பிராவதி மருவி அமராவதி ஆயிற்று.

புராணக்கதைகள்

ஆனிலையப்பர் திருக்கோயில் தொடர்புடைய பல புராணக் கதைகள் உண்டு.

ஒரு காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மா படைக்கும் தொழிலில் கர்வம் கொண்டு மிகுந்த அகந்தையோடு செயல்பட ஆரம்பித்தார்.

முக்காலம் உணர்ந்த சிவபிரான் பிரம்மாவின் இறுமாப்பையும் அறியாமையையும் நீக்கும் வகையில் தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார். அது ஒரு திருவிளையாடலாக உருவெடுத்தது.

அதே காலகட்டத்தில் காமதேனு என்ற பசு, நாரதரின் வழிகாட்டுதலின்படி பூமிக்கு வந்து வஞ்சி வனமாக இருந்த இந்தத் தலத்தில் தவம் மேற்கொண்டிருந்தது.

அன்றாடம் அப்பசு நாரதர் கூறியிருந்தபடி  வஞ்சி வனத்தில் இருந்த புற்று ஒன்றின் அடிப்பகுதியில் சுயம்பு லிங்க மூர்த்தியாக இருந்த ஆதி லிங்கத்திற்குப் பால் சொரிந்து வந்தது.

சிவலிங்கத்திற்குப் பசு பால் சொரியும் காட்சி

ஒரு நாள் இப்படி பால் சொரியும் போது இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிட்டது. லிங்கத்தினின்று ரத்தம் வழியத் தொடங்கியது. துடித்துப் போன காமதேனு மனம் வருந்தி மீளாத துயரத்தில் ஆழ்ந்தது.

அன்றைய தவத்திலும் அதன் துயர் தொடர்ந்தது. இக்காட்சியினைக் கண்ணுற்ற இறைவன் இதுதான் தக்க சமயம் என காமதேனுவின் முன் தோன்றி அருள் பாலித்தார்.

கூடவே பிரம்மாவுக்கு தண்டனையாகவும், காமதேனுவிற்கு வெகுமதியாகவும்  பிரம்மாவிடமிருந்து படைக்கும் தொழிலைக் காமதேனுவிற்கு வழங்கி விட்டார்.

பயந்து போன பிரம்மா தன் தவறை உணர்ந்து மன்னித்து அருள வேண்டி இறைவனிடம் சரண் அடைந்தார்.

இறையனாரும் மனமிரங்கி, "பிரம்ம தேவரே! இத்தலத்தில் பெரு வேள்வி ஒன்று மேற்கொள். நிறைவில் கலைமகளை மணம் செய்துகொண்டு படைப்புத் தொழிலை இவ்விடத்திலேயே தொடங்குவாயாக!" எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

பிரம்மா அமராவதி நதியின் வடபுறத்தில் தன் பெயரால் பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தார். பின்னர் வெண்ணெய் மலையில் பெரிய வேள்விச்சாலை ஏற்படுத்தி வேள்வி செய்தார்.

இவ்வேள்விக்கு அத்திரி, அகத்தியர், பரத்துவாசர், வியாசர், சுகர், காசிபர், கோசிகர், வசிஷ்டர், பிருகு, துர்வாசர், வாமதேவர், ததீசி, கண்ணுவர், 
சாமதேற்கியர், சாபாலி, சாண்டில்லியர், உரோமபாதர், உபமன்னியர், சங்கணர், பராசரர், கௌதமர், சுதீக்கணர், மிருகண்டு, மார்க்கண்டர்,  விபாண்டகர், விச்சுவாசு, மரீசி, வாமத்திரி, கவுண்டின்னியர், வால்கில்லியர், அட்டாக்கின், தெக்கணர், புலத்தியர்,  சனகர், சனாந்தகர், சனந்தரர், சனற்குமாரர்,  நாரதர், கமலமாதவர், தத்தாத்திரேயர்,  அங்கிரார் முதலிய முனிவர்களும் விச்சையர், இயக்கர், பூசால் முதலானோரும்  வந்திருந்தனர்.

வேள்வியைச் சிறப்பாக முடித்த பிரம்மா அவர்கள் ஆசியோடு கலைமகளை மணம் முடித்தார்.

அதுசமயம் சிவபிரான் உமையுடன் தோன்றி பிரம்மாவிடம் படைக்கும் தொழிலை மீண்டும் வழங்கினார். காமதேனுவை  சுவர்க்கம் சென்று வாழ்வாயாக என்று அருள் பாலித்தார்.

மீண்டும் பிரம்மா படைக்கும் தொழிலைத்  தொடங்கிய திருத்தலம் அமைந்திருக்கும் நகர் என்பதாலேயே இவ்வூருக்கு 'கரு'வூர் எனப் பெயர் வந்தது.

இன்றும் ஆனிலையப்பர் பசுபதீஸ்வரராக அருள் பாலிக்கும் மூலவரான சிவலிங்கத்தின் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்ட இடம் பள்ளமாக உள்ளது. மேற்பரப்பு சொரசொரப்பாய் விளங்குகிறது.

சௌந்தரநாயகி என்னும் வடிவுடைநாயகி

இக் கோயிலின் இறைவியரில் ஒருவர் சௌந்தரநாயகி. மானுடப் பிறவியான இவர் தனது தவப் பயனால் ஈசனை மணந்ததாக புராணம்.

அந்நிகழ்வு பக்திமயமானது.

கரூருக்கு அருகே அமராவதி ஆற்றங்கரையில் அப்பிபாளையம் என்னும் சிறு கிராமம்.

இங்கு வேட்டுவர் குலப் பெற்றோருக்கு வடிவுடையாள் என்ற ஓர் அழகிய குழந்தை பிறந்தது.

அக்குழந்தை  'சிவ...சிவ' என்றே மழலை பேசியது. அன்பிலும், பேச்சிலும், அறிவிலும் மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் வித்தியாசமாக வளர்ந்தது.

சதாகாலமும் சிவனைத் துதித்து வந்த அக்குழந்தை வளர்ந்த பின்னும் சிவன்பால் ஈடற்ற ஈடுபாடு கொண்டிருந்தது.

அவளது வேண்டுகோளை ஏற்று தந்தை சந்தனக் கட்டையால் சிவலிங்கம் செய்து தந்தார். அப்பெண் நாள்தோறும் சிவார்ச்சனை செய்ய ஆரம்பித்தாள். எப்போதும் திருநீருடனேயே காட்சியளித்தாள். பஞ்சாட்சரம் ஒலித்தாள். புலால் உணவை மறுத்தாள்.

பெற்றோரும் உற்றோரும் அவளது நடவடிக்கைகளைப் பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.

உரிய வயது வந்ததும் அவளுக்குப் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். அவளோ சிவனையே மணப்பேன் என உறுதிபடக் கூற ஆரம்பித்தாள்.

அச்சமடைந்த பெற்றோர் மந்திரவாதிகளையும் வைத்தியர்களையும் அழைத்து வந்து சோதித்தனர். வந்தவர்களிடமும் "கனவிலும் நனவிலும் எனை ஆளும் பசுபதீஸ்வரரையே மணப்பேன்" எனச் சத்தியம் செய்தாள்.

திருமணப் பேச்சு எடுத்த போதெல்லாம் பெற்றோரிடம் "ஈஸ்வரனை வணங்குங்கள். அவர் நல்வழி காட்டுவார்" என்று சொல்லி வந்தாள்.

"பசுபதியை எண்ணித் தியானிக்கும்போது என்னையே மறக்கிறேன். ஓர் ஒளி தோன்றுகிறது. புன்சிரிப்பு முகத்துடன் அவரைக் காண்கிறேன்.

கனவில் தோன்றி அவர் உங்களுக்கு நடந்ததையும் நடக்கப் போவதையும் சொல்வார்" என்று ஒரு நாள் அவள் பெற்றோரிடம் கூறினாள்.

அன்றிரவே பசுபதீஸ்வரர் தந்தையின் கனவில் தோன்றி "உங்கள் மகள் வடிவுடையாளை பங்குனி உத்திரத் திருவிழா ஏழாவது நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்று பூச்சொரிந்திருக்கும்" என்று கூறி மறைந்தார்.

பெற்றோர் மட்டுமல்ல ஊர் மக்களும் அந்நாளுக்காகக் காத்திருந்தனர்.

சரியாக ஏழாம் நாள் உதயத்தில் அப்பிபாளையம் முழுவதும் பூ மழை பொழிந்து இருந்தது.

அதேசமயம்  தியானத்திலிருந்த வடிவுடையாள் கழுத்தில் தெய்வீக ஒளி வீசும் மலர் மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

அனைவரும் அவளை இறைவி எனப் போற்றி வணங்கி பல்லக்கில் ஏற்றி பசுபதீஸ்வரர் ஆலயத்திற்குத் கொண்டு வந்தனர். அங்கே அனைவரின் கண் முன்னர் வடிவுடையாள் பசுபதீஸ்வரரோடு ஐக்கியமானாள்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து இன்று வரை பங்குனி மாதம் ஆறாம் நாள் பசுபதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும் அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் திரும்பி வருவதும்  திருவிழாவாக  நடைபெற்று வருகிறது.

இச்சை எனும் சக்தி ஞானம் எனும் தியானத்தால் கிரியை என்னும் இறை சக்தியோடு ஒன்று கலப்பதே வடிவுடையநாயகியின் வரலாறு. 

இத்திருத்தலத்தில் சௌந்தரநாயகி  தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியவாறு அருளாட்சி புரிந்து வருகிறார்.

மகா சித்தர் கருவூரார்

கருவூரார் சன்னதி

சித்தர் கருவூரார் கரூரில் அவதரித்த மகான். அவர் பலகாலம் சித்தராக கரூரில் வலம் வந்து கொண்டிருந்தார்.

அவர் முக்தி அடையும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தபோது இறையின் திருவுளப்படி ஒரு பெரும் பிரச்சனையைச் சமாளிக்க வேண்டி இருந்தது.

அவர் பணிபுரிந்த கோயிலில் மது, மாமிசம் புழங்கப்படுவதாக கருவூரார் மீது ஒரு கூட்டம் மன்னரிடம் புகார் அளித்தது. விசாரித்த சோழ மன்னர் கருவூரார் மீது எந்தக் களங்கமும் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டார்.

ஆனால் அந்தக் கூட்டம் அத்தோடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாய் இல்லை.

ஒரு தைப்பூசத்தன்று அமராவதி ஆற்றங்கரையில் கருவூரார் நீராடிக் கொண்டிருந்தபோது அக்கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு அவரைக் கொல்ல யத்தனித்தது.

அக்கூட்டம் கொலை வெறியோடு துரத்த கருவூரார் விரைந்து ஓடிவந்து மூலவரான இறைவன் கருவறையை அடைந்து துரத்தி வந்த கூட்டத்தினர் பார்த்திருக்கும்போதே இறையோடு இறையாக ஐக்கியமானார்.

தன்னுள் ஐக்கியமான கருவூராரை இடப்புறமாக  அமர்த்தியமையால் சிவலிங்கம் சற்று சாய்ந்து காட்சியளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

கோயிலின் வெளிப் பிரகாரத்தில் தனிச் சன்னதியில் பெரும் சித்தர் கருவூரார் நாடி வருவோருக்குக் கருணையுடன் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார்.

பூக்குடலை நாயகர்கள்

இக்கோயில் தொடர்புடைய இரண்டு நாயன்மார்களையும் ஒரு சிவனடியாரையும் பெரியபுராணம் போற்றிப் பெருமிதம் கொள்கிறது.

எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார், சிவகாமியாண்டார் ஆகியோரே  சேக்கிழார் போற்றும் சிவ மைந்தர்கள் .

எல்லாம் வல்ல எம்பிரான் ஒரு திருவிளையாடல் நடத்தி தடுத்தாட்கொண்டவர்களே  பூக்குடலை நாயகர்கள்.

அந்நிகழ்வு ஓர் ஆன்மிக அதிசயம்.

எறிபத்த நாயனார் பசுபதீஸ்வரர் கோயிலை வாழ்விடமாகக் கொண்ட முரட்டு பக்தர். சிவப்பணி தவிர வேறொன்றும் அறியாதவர். எப்போதும் கையில் கூரிய ஆயுதமான மழு ஒன்றை வைத்திருப்பார்.

சிவகாமியாண்டார் ஒரு முதியவர். தினந்தோறும் பூக்களைப் பறித்து வந்து மாலை கட்டி ஈசனுக்குச் சூட்டி மகிழும் தீவிர சிவ பக்தர்.

புகழ்ச்சோழர் நாடாண்டு வந்த சோழ மன்னர். சிவனடியார்களை சிவன் என்றே போற்றி வணங்கும் சிவனாட்சி மன்னவர்.

ஒரு நாள் சிவகாமியாண்டார் கோயில் நந்தவனத்தில் பூக்களைப் பறித்து பூக்குடலையில் (பூக்கூடை) நிரப்பிக் கொண்டு  கோயில் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பட்டத்து யானை கோயில் வீதியில் அமர்க்களமாய் வந்தது. அந்த யானை சாலையின் இருபுறமும் வந்தவர்களைப் பயமுறுத்தியபடி  ஆட்டம் போட்டபடி வந்தது. இத்தனைக்கும் கூடவே ஐந்து யானைப் பாகர்களும் யானையைக் கட்டுப்படுத்தாமல்  ரசித்தபடி  வந்தனர்.

பட்டத்து யானை போட்ட ஆட்டத்தில் முதியவர் சிவகாமியாண்டார் ஓரமாகத் தள்ளப்பட தரையில் விழுந்தார். பூக்குடலைப் பூக்கள் சிதறின. 

அதைக் கண்டதும் பதறிப் போனார் சிவகாமியாண்டார்.

'சிவ சிவா... இதைக் கேட்க ஆட்களே இல்லையா?' என்று முணுமுணுத்தபடி  எழ முயற்சித்தார். முடியவில்லை.

சரியாக அதே தருணம் கோயில் வீதிக்கு வந்த எறிபத்தர் இக்காட்சியைக் கண்டார். ஒரு முதிய சிவபக்தருக்கு நேர்ந்த  கொடுமை கண்டு வெகுண்டு எழுந்தார்.

அப்போதே விரைந்து யானையின் முன் சென்று பட்டத்து யானையையும் உடன் வந்த ஐந்து பாகர்களையும்  மழுவை வீசிக் கொன்றொழித்தார்.

செய்தி மன்னருக்குப் போகவே சினம் கொண்ட மன்னர் புகழ்ச்சோழர் சீறிப்பாய்ந்து  வந்தார்.

வந்த இடத்தில் மாண்டவர் தவிர யாரும் இல்லை. சற்று தூரத்தில் மழுவோடு ஒரு சிவனடியாரே தென்பட்டார்.

சிவ அம்சமாகத் திகழ்ந்த எறிபத்தரைப் பார்த்த மாத்திரத்தில் 'சிவனடியார் தவறிழைத்திருக்க மாட்டார். தனது தரப்பினரே தவறு செய்திருப்பார்கள்' என்று கணித்தார் புகழ்ச்சோழர்.

உடனே எறிபத்தர் அருகில் வந்து இந்நிகழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாய் இருந்த தன்னையும் கொன்றுவிட வேண்டி பணிந்தார். மன்னரின் மாண்பு கண்டு அவரைக் கொல்லாது அவரடி விழுந்தார் எறிபத்தர்.

எறிபத்த நாயனார்

அதுசமயம் இறையொலி ஒன்று எழுந்தது.

"அன்பர்களே…! இது எம் திருவிளையாடல். உங்கள் பேரன்பை மெச்சினோம். சிவப் பணி தொடருங்கள். உரிய காலத்தில் கயிலாயம் வந்து என் அருகிலேயே சிவகணங்களாய் இருப்பீர்."

வானில் இருந்து தேவர்களும் முனிவர்களும் மலர் தூவ அது முதல் எறிபத்தரும், புகழ்ச்சோழரும் எறிபத்த நாயனராகவும், புகழ்ச்சோழ நாயனராகவும்  பெரும் பேறு பெற்றனர்.

புகழ்ச்சோழ நாயனார்

இறை விருப்பப்படி இந்த ஆன்மிக நிகழ்வு நிகழ்ந்த தலம் இத்திருத்தலமே.

முசுகுந்த சக்கரவர்த்தி 

ஒரு சமயம் கயிலை மலைச்சாரலில் சிவபெருமான் உமாதேவியுடன் வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். அப்போது மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு விளையாட்டாய் வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட்டது.

இச்செயல் உமாதேவிக்கு எரிச்சல் மூட்டியது. ஆனால் பரமனைப் பொறுத்தமட்டில் இது ஓர் அர்ச்சனையாகத் தோன்றியது.

அதன் பலன் அக்குரங்கு அடுத்த ஜென்மத்தில் மானிடராய்ப் பிறந்து அரசனாகவும் ஆனது. ஐந்தறிவு பெற்றிருந்த அக்குரங்கே முசுகுந்த சக்கரவர்த்தி ஆனது.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு முகம் மட்டும் குரங்கு முகம்.  

வில்வ இலைகளைப்குரங்கு பறித்துப் போட்டபோது அதை அர்ச்சனையாக நினைத்த சிவபிரான் குரங்குக்கு மானிடராய்ப் பிறக்க வரம் தர விரும்பினார். 

அப்போது குரங்கு "ஐயனே அப்போதும் இந்நிலை மறவாதிருக்க முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டது.

அதன் பின்னர் அக்குரங்கு கருவூரில் பிறந்து  வளர்ந்து அரசன் ஆனது. திருமாலிடத்தில் சிவதீட்சை பெற்று கரூர் ஆனிலையப்பரைத் தரிசித்து அரசாண்டு வந்தது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி

இந்திரலோகத்தின் தலைவனான இந்திரனின் மகள் தெய்வயானைக்கும் முருகப்பெருமானுக்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது.

அத்திருமணத்திற்கு அப்போது கருவூரை ஆண்டு கொண்டிருந்த மன்னன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்ததாகக் கல்வெட்டுச் செய்தி உள்ளது.

புராண காலத்திலேயே கட்டப்பட்ட இத்திருக்கோயிலை முசுகுந்த சக்கரவர்த்தி புரைமைத்ததாகக் குறிப்புகள் உள்ளன.

அகத்தியர் போற்றிய கோயில்

உஜ்ஜயினியை கோபிதாரத்துவஜன் என்ற மன்னன் ஆண்டு வந்த சமயம் அவனைக் காண அகத்தியர் மாமுனி சில முனிவர்களுடன் வருகை புரிந்தார்.

மன்னன் அனைவரையும் மதித்து சிறப்பு செய்தான். ஆனால் விதி காரணமாக அகத்தியரை அவமதித்தான்.

கோபமுற்ற அகத்தியர் சாபம் விட நினைத்தார். ஆனால் அந்த நேரம் அவர் விரதம் இருந்ததால் சாபமிட முடியவில்லை.

அதனால் பிரமிட்ட முனிவரை அழைத்து சாபமிடக் கூறினார். பிரமிட்டர் விட்ட சாபம் மன்னனை யாராலும் தீர்க்க இயலாத குஷ்ட நோய்க்கு உள்ளாக்கியது.

மிகவும் அவதிப்பட்ட கோபிதாரத்துவஜன் இறுதியில் தன் செயலுக்கு மன்னிப்புக் கோரி பொதிகைமலையில் இருந்த அகத்தியரிடமே சரணடைந்தான்.

மனமிரங்கிய அகத்திய முனிவர் சாப விமோசனத்திற்குச் சுட்டிக்காட்டிய தலமே கருவூர் ஆனிலையப்பர் திருக்கோயில்.

மன்னனும் திருத்தலத்திற்கு வந்து பிரம்ம தீர்த்ததில் நீராடி பசுபதீஸ்வரரைத் தொடர்ந்து வழிபட்டு குணமடைந்து மீண்டும் சிறப்பாக அரசாண்டான்.

இந்தப் புராணக் கதையின் படி அகத்தியர் போற்றிய 'சாப விமோசனக் கோயில்' எனும் பெருமை இத்தலத்திற்கு கிடைத்தது.

இதுபோன்றே களவு, கொலை போன்ற பாதகங்களுக்கு அஞ்சாத விபண்டகன் என்ற மகா கொடியவன் இத்தலத்தில் மார்கழித் திருநாளில் கூட்ட நெரிசலில் களவாட வந்தான்.

சிவனடியார் போன்று போலி வேடமிட்டு வந்த அவன் இறையனாரின் கோபத்துக்கு உள்ளாகி கூட்ட நெரிசலில் மூர்ச்சை அடைந்தான். 

அருகில் இருந்தவர்கள் அவனை வெளியே எடுத்து வருகையில் நுழைவாயிலை அடைவதற்குள் மரணிக்கும் நிலைக்குப் போனான்.

அவன் உயிரைப் பறிக்க எமகணங்கள் வரும்போது ஆனிலையில் அவன் உயிர் நீத்த காரணத்தால் சிவகணங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

திருட வந்த போதிலும் ஆனிலையில் உயிர் நீத்ததால் அவனுக்குக் கயிலாயத்தில் இடம் கிடைத்தது. சிவகணங்களின் தலைவனாகவே பதவி பெற்றான்.

கோயில் அமைப்பு

கோயிலின் ராஜகோபுரம் ஏழு நிலை கோபுரமாக 108 அடியில்  உயர்ந்து அருள் பாலிக்கிறது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் மற்றும் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.



கோயில் கிழமேல் 465 அடியும், தென் வடல் 250 அடியும் கொண்ட விசாலமான கற்கோயில்.

நுழைவாயிலில் ஒரு கல் மண்டபமும் அதன் முன் கருங்கல்லால் ஆன கொடி மரமும் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்ச்சோழ நாயனார் கையில் சிவனடியார் ஒருவரின் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பம் உள்ளது. 

மறுபுறத்தில் சிவலிங்கத்தை காமதேனு  நாவால் வருடுவது போலவும் அதன் பின் கால்களுக்கு இடையே பால்மடிக்கு நேர் கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது.

கல் மண்டபத்தின் வலப்புறத்தில் புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது .இது நூற்றுக்கால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தில் சித்தர் கருவூராருக்குத் தனிச் சன்னதி உள்ளது. 

கோயிலினுள் நுழையும் போது வலப்பக்கத் தூண் ஒன்றில் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது.

கோயிலினுள் மூலவர் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு முன்னர் பெரிய நந்தியும்  கொடி மரமும் அருட்காட்சி தருகின்றன.

பசுபதீஸ்வரர் சன்னதி, தேவியர் இருவர் உறையும்  சன்னதிகள் உள்ளன.

கிருபாநாயகியின் சிலை ரூபம் உயிர்த் துடிப்பு உடையதாக உள்ளது. விழிகள் தத்ரூபமாக அத்தனை அம்சம்.

உமையவளான மலைமகள் கலைமகள் அலைமகளுடன் கயிலையிலிருந்து வஞ்சிவனம் வந்து அமராவதியில் நீராடி நாள்தோறும் சிவார்ச்சனை செய்து பசுபதீஸ்வரரை வழிபட்டதாக அலங்காரவதி சருக்கம்  கூறுகிறது.

இரு தாயாருக்கும் நந்தி அமைந்திருப்பது சிறப்பு.

முருகப்பெருமானுக்கு  வள்ளி தெய்வானையுடன் கூடிய சன்னதி உள்ளது.

நவகிரகங்களுக்கு அருகில் உள்ள பைரவர் ஏகாந்தமாய்க் காட்சி அளிக்கிறார்.

கருவூரார் ஜீவசமாதி கருவறையில் மூலவரின் திருவடியில் இருப்பதாகவும், எறிபத்த நாயனாரின் ஜீவசமாதி கல்மண்டபத்திற்கும் கல் தூண் மற்றும் பின்னாளில் வைக்கப்பட்ட வேலுக்கும் இடையில் இருப்பதாகவும், புகழ்ச்சோழர் மண்டபத்தின் மத்தியில் புகழ்ச்சோழரின் ஜீவசமாதி இருப்பதாகவும் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஜீவநாடி மூலம் அண்மையில் தெரிய வந்துள்ளது.



தலச் சிறப்பு

இது ஒரு பஞ்சலிங்க தலம். பசுபதிலிங்கம், கோடீசுர லிங்கம் கயிலாயநாத லிங்கம், கரியமாலீச லிங்கம், வஞ்சுளேச்சுர லிங்கம் ஆகிய லிங்கங்கள் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளன.

கரியமாலீச லிங்கம்

பங்குனி 14,15,16 நாட்களில் சூரிய ஒளிக் கதிர்கள் கோபுர மாடம் வழியாக நுழைந்து பசுபதீஸ்வரர் திருமேனி மீது பட்டு ஒளிர்கிறது. இக்காட்சியைக் கண்டு தரிசிக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

கயிலை, மந்திரம், காசி, காஞ்சி, பிரயாகை, நைமிசாரண்யம், சேது, வஞ்சுளாரண்யம் ஆகிய சிவத்தலங்கள் மிகச் சிறந்தன என்பது ஆன்றோர் கூற்று.

வஞ்சுளாரண்யம் என்னும் இத்தலத்தில்  ஒன்பது நாள் வழிபட்டுப் பூசித்தவர் மற்ற எட்டுத் தலங்களையும் வழிபட்டதன் பலனடைவர்.

பலன்கள்

இத்தலத்திற்கு வந்து வணங்குவோருக்கு முன்வினைப் பாவங்கள் நீங்கும். திருமணம் கூடும். மகப்பேறும் கிட்டும். செல்வம் பெருகும்.

தீர்க்காயுள்,சிவ பதவி, முக்தி முதலானவை கிடைக்கும்.

இங்கு காராம்பசு நெய் கொண்டு விளக்கேற்றுவோர் பெறும் பலனை நான்முகன் கூட கூற இயலாதாம்.

தட்சிணாமூர்த்தி சன்னதியில் நமசிவாய என ஓதுபவர் காசியில் கோடி முறை ஓதிய பலன் அடைவர்.


இத்திருத்தலத்தில் செய்யும் தானங்கள் பன்மடங்கு பலன் தரும். 

அதே போன்று இத்திருக்கோயிலில் உள்ள தீர்த்தங்களிலும் தொடர்புடைய தீர்த்தங்களிலும் நீராடுபவர்  அடையும் பலன்கள் எண்ணற்றவை.

பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் நீராடி திருவிளக்கேற்றி  வந்தால் சிவபதம் கிடைக்கும் என்பது அடியார்களின் நம்பிக்கை.

கருவூர்ப் புராணத்தைப் படித்தலும் கேட்டலுமே சிவபதம் கிடைக்க எளிய வழி என்கிறார்கள் ஆன்றோர்கள்.

முக்கியத் திருவிழாக்கள்/ பூஜைகள்

பங்குனி உத்திரம் 13 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது.

மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, நவராத்திரி, உறியடித் திருவிழா, எறிபத்த நாயனரின் பக்தர்கள் நடத்தும் பூக்குடலைத் விழா, கந்த சஷ்டி விழா முதலானவை முக்கிய திருவிழாக்கள்.

பிரதோஷம், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 'தெய்வத் திருமணங்கள்' என்னும் தெய்வீக நிகழ்வு பெரும் திருவிழாவாக நடைபெறுகிறது. இறையனாருக்கும் இரு பெரும் தேவிகளான அலங்காரவல்லிக்கும் சௌந்தரநாயகிக்கும் நடக்கும் தெய்வத் திருமண விழா இது. 



பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெய்வத் திருமண விழாவில் கலந்து கொண்டு இறைவனுக்கும் இறைவியர் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து மொய் வழங்கி, விருந்துண்டு இறையருள் பெறுகின்றனர்.

பாடல் பெற்ற தலம்

திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது.

பாடல் பெற்ற தலங்கள் 274 லில் இத்தலம்  211 ஆவது சிவத்தலமாகும்.

திருஞானசம்பந்தர் தந்தை சிவபாத இருதயர் மற்றும் பிற அடியார்களுடன் வருகை புரிந்து இறைவனைத் தொழுது பாடியுள்ளார்.

இங்குள்ள அழகிய முருகப் பெருமானைப் புகழ்ந்து அருணகிரிநாதர் 9  திருப்புகழ் பாடியுள்ளார்.

கரூரில் உள்ள சோழர்கள் கால கல்வெட்டுகள் 17 பல வரலாற்றுச் சான்றுகளைத் தருகின்றன.

நந்தி தேவாரம்

ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீட நிறுவனர் சத்குரு சுவாமி சித்தகுருஜி நந்தி ஜீவநாடி வாயிலாக கரூர் ஆனிலையப்பர் குறித்து நந்தி தேவாரம் அருளியுள்ளார்.

வெண்திங்கள் தலைசூடி விடையேறி கனம் சூழ
மண் மங்க நுரைபொங்க கரைபுரளும் காவேரி
தண்கொண்ட கருவூரில் குடிகொண்ட ஆநிலையார்
கண்கண்டு கைதொழுவோர் கரைசேர்வார் பிறப்பின்றி

அமைவிடம்

திருச்சியில் இருந்து 76 கி.மீ, கோயம்புத்தூரில் இருந்து 113 கி.மீ, சேலத்தில் இருந்து 100 கி.மீ, மதுரையில் இருந்து 144 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது கரூர்.

ரயில், வாகனப் போக்குவரத்து உள்ளது.

வான்வழிப் பயணிகள் மேல் உள்ள பிரதான ஊர்கள் வரை வானூர்தியில் வந்து பின்னர் கரூர் வந்தடையலாம்.

அருகில் உள்ள திருத்தலங்கள்
  • வெண்ணைமலை பாலமுருகன் கோயில்.
  • தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்.
  • நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் திருக்கோயில்.
  • ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்(நவநாத சித்தர் ஜீவசமாதி பீடம்)
  • கொங்கு ஏழு சிவ தலங்களில் ஒன்றான வெஞ்சமாக் கூடலூர் 
வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மிக அருகில் உள்ளது.

கூகுள் மேப்


முகவரி

அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்,

சன்னதி தெரு, மடவிளாகம், கரூர் - 639001

தமிழ்நாடு

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம். 

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்



Comments

  1. குமார், சேலம்25 August 2025 at 22:35

    " அங்கிரார் மற்றும் பூசால் என்றால் யாவர் ?
    திருத்தலங்கள் வரிசையில் நந்தீஸ்வரர் ஞான பீடம் இடம் பெறாததற்கு காரணம் ?
    ( அற்புதமான தகவல்கள்...🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருச்செங்கோடு

அவிநாசி

கொடுமுடி