திருச்செங்கோடு
பாடல் பெற்ற தலங்கள்-7
திருச்செங்கோடு
கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட இப்போதைய திருச்செங்கோடு ஆகும்.
இது தெய்வாம்சமாகக் காட்சியளிக்கும் ஒரு மலைக்கோயில். கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமைந்துவிட்டது இறைவனின் திருவுளமே.
இது இறைவனும் இறைவியும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் தலம்.
சிவன் கோயில் என்றாலும் செங்கோட்டு வேலவர் குடிகொண்டிருக்கும் திருமுருகன் திருத்தலம்.
அர்த்தநாரீஸ்வரர் சிவனும் பார்வதியும் இணைந்த ஓர் உருவமாய் நின்ற கோலத்திலும், முருகப்பெருமான் செங்கோட்டு வேலவராய் வள்ளி தேவசேனையுடன் நின்ற கோலத்திலும், மகாவிஷ்ணு ஆதி கேசவப் பெருமாளாக ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்திலும் ஒரு சேர அருள் மழை பொழியும் திருத்தலம்.
பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208 ஆவதாக இடம் பெற்றிருக்கும் திருச்செங்கோடு செல்வது பக்த கோடிகள் பலருக்கும் கிடைக்காத ஒரு கொடுப்பினை.
வாருங்கள்! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலையும் திருச்செங்கோடு மலையையும் வலம் வந்து அருள் பெறுவோம்.
![]() |
| திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை தோற்றம் |
திருச்செங்கோடு
செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு எனப் பெயர் வந்தது. திருச்செங்கோடு என்பதற்கு அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை, செங்குத்தான மலை என்ற பொருளும் உண்டு.
வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிவனின் சிரம் போல் காட்சியளிக்கும்.
ஊரின் மேலமாட வீதியில் இருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்று இருப்பதால் நாகசாலை என்று பெயர் பெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் உறையும் இத்திருமலை நாககிரி, சோனகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை, கோதைமலை முதலான பெயர்களால் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் திருச்செங்கோட்டிலும் வாசுதேவநல்லூரிலும் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இவ்விரண்டில் புராணச் செறிவும் இறைவனின் திருவிளையாடல்களும் கொண்டது திருச்செங்கோடு.
இறைவன் இறைவி
இத்திருத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பாகம்பிரியாள்.
இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் செங்கோட்டு வேலவராகவும்,
மகாவிஷ்ணு ஆதிகேசவப் பெருமாளாகவும் அருக்காட்சி தருகின்றனர்.
![]() |
| செங்கோட்டு வேலவர் |
இது சிவத்தலமாய் இருப்பினும் முருகப்பெருமானுக்கு மிக உகந்த தலமாகும்.
வழிபட்டோர்
கேதார கௌரி, விஷ்ணு, சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்தார், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலானோர்.
பாடல் பெற்ற தலம்
இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 'வெந்த வெந்நீர் அணிந்து....' என்று துவங்கி பதிகங்கள் பாடியுள்ளார்.
மேலும் திருஞானசம்பந்தரே திருநீலகண்ட பதிகங்கள் பாடியுள்ளார். அதனால் இது பாடல் பெற்ற தலமாகிறது.
திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் தலயாத்திரையில் முதலில் வந்த தலம் திருச்செங்கோடு என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
பல ஊர்களுக்குச் சென்று சிவத்தலங்களை வழிபட்ட ஞானசம்பந்தர், பின்னர் ஒரு முறையும் இங்கு வந்து தனது சீடர்களுக்கு ஏற்பட்ட தளிர் சுரத்தைப் போக்க இறைவனைப் போற்றி 'தீவினை வந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என்று இறைவனுக்கே ஆணையிட்டுப் பதிகம் பாடினார் என்கிறது பெரிய புராணம்.
அருணகிரிநாதர் 25 க்கும் மேற்பட்ட திருப்புகழ் பாடல்களிலும், 8 கந்தர் அலங்காரப் பாடல்களிலும், கந்தர் அனுபூதியில் ஒரு பாடலிலும் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் செங்கோட்டு வேலவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒரு சில பதிகங்களை இத்தலத்தில் பாடியுள்ளார்.
வீரகவிராஜ பண்டிதர் எழுதிய தலபுராணம், முதலாம் இராசராசன், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இன்னும் பல சிறப்புத் தகவல்களைத் தருகின்றன.
தல விருட்சம்
இக்கோயிலின் தலமரம் இலுப்பை மரம். வடக்குப் பிரகாரத்தில் நடராசர் சன்னதியை (கனகசபை) ஒட்டி இத்தலமரம் உள்ளது.
![]() |
| இலுப்பை மரம் |
தீர்த்தங்கள்
தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாபநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்த கன்னியர் தீர்த்தம் முதலான புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டது இத்திருத்தலம்.
இவற்றில் முக்கிய தீர்த்தங்களைப் பற்றிய குறிப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
தேவ தீர்த்தம்
அர்த்தநாரீஸ்வரரின் திருவடியின் கீழ் அமைந்துள்ளது தேவ தீர்த்தம். இதை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் வழங்குவார்கள்.
சிவ தீர்த்தம்
இது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு தன்ம தீர்த்தம், இடப தீர்த்தம் என்ற பெயர்களும் உண்டு.
தேவர்களும், முனிவர்களும், சிவனடியார்களும், பக்தர்களும் நலன் பெறவும் முக்தி அடையவும் சிவபிரானே அருளியதாக ஐதீகம்.
கணபதி தீர்த்தம்
திருக்கோயிலுக்குப் படிகள் வழியாகச் செல்லும்போது இளைப்பாற்றி மண்டபத்துக்கு அருகில் உள்ளது கணபதி தீர்த்தம்.
பார்வதி தேவி இறைவனின் இடப்பாகம் வேண்டி விரதம் மேற்கொண்டு தவமியற்ற இத்திருமலைக்கு வந்தபோது அன்னை நீராடுவதற்கு கணபதியால் தோற்றுவிக்கப்பட்டது இந்தத் தீர்த்தம்.
குமார தீர்த்தம்
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது.
வாணாசுரன் என்னும் பக்தன் இத்தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டு சிவகணங்களின் தலைமையேற்று வாழ்ந்ததாகப் புராணம் உள்ளது.
நாக தீர்த்தம்
திருக்கோயிலில் கிழக்கு மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது
நாக தீர்த்தம்.
வாயு தேவனுக்கும் நாகராசனுக்கும் நடந்த புராண காலத்துப் போரில் தேவர்களும், முனிவர்களும் உயிரினங்களும் மிகுந்த துயருற்றனர். அந்தப் பாவத்தை நீக்கிக்கொள்ள நாகராசன் இத்திருத்தலத்திற்கு வந்து தன் பெயரால் இத்தீர்த்தத்தைத் தோற்றுவித்து வழிபாடு செய்து வினைப் பயன் நீக்கியதாகப் புராணம் கூறுகிறது.
பாபநாச தீர்த்தம்
படிகள் வழியாக தேவரடியார் மண்டபத்தைக் கடந்து செல்கையில் இளைப்பாற்றி மண்டபத்திற்கு முன்னர் பாபநாச தீர்த்தம் உள்ளது.
திடமதி என்னும் அந்தணர் பேய் பிடித்து தாங்க முடியாத அளவிற்கு அல்லல் பட்டபோது அவர் அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியர் பெருமான் திருச்செங்கோடு சென்று இத்தீர்த்தத்தில் நீராடினால் நலன் பெறலாம் என அறிவுரை கூற அவ்விதமே அந்த அந்தணர் இந்தத் தலத்திற்கு வந்து நீராடி நலன் பெற்றதாக குறிப்பு உள்ளது.
மலைக்கோயில்
திருச்செங்கோடு மலைக்கோயிலின் உயரம் 1901 அடிகள். இறைவனைத் தரிசிக்க அடிவாரத்தில் இருந்து படிகள் வழியாகவும் மலைச் சாலை வழியாகவும் செல்லலாம்.
1200 படிகளில் ஏறிச் சென்று திருக்கோயிலை அடையலாம். மலைச்சாலையில் செல்வதென்றால் 2 1/2 கி. மீட்டர் தூரம்.
படிக்கட்டு வழியில் பாம்பு உருவங்கள் உள்ளன. ஓரிடத்தில் 20 அடி நீளமான பாம்பு வடிவம் உள்ளது.
![]() |
| நாகர் சன்னதி |
படிகளின் முடிவில் நாகர் சன்னதி உள்ளது.
60-ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்தது. ஒரு காலத்தில் இங்கு நின்று சத்தியம் செய்தால் அதை எதிர் தரப்பும் ஏற்றுக் கொள்வார்களாம். அந்தப் படியே மக்களின் நீதிமன்றமாகக் கருதப்பட்டது.
கோயில் அமைப்பு
மலையேறினால் 24.5 அடி உயரம் கொண்ட ஐந்து அடுக்கு ராஜகோபுரம் வடக்கு வாசலில் தரிசனம் தரும். கிழக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் உண்டு. தென்திசை வாசலில் சிறு கோபுரம் காணப்படும்.
வடக்கு வாசலில் நுழைந்த உடனேயே செங்கோட்டு வேலவர் சன்னதி அருள் சொரியக் காத்திருக்கும்.
![]() |
| ஆலய முகப்பு தோற்றம் |
செங்கோட்டு வேலவர் சன்னதி
செங்கோட்டு வேலவர் மிக அழகான திருவுருவத்தோடு கிழக்கு நோக்கி நின்ற வண்ணம் காட்சியளிக்கிறார். வலக்கையில் வேலை ஒன்றி, இடக்கையை இடுப்பில் ஒன்றியவாறு நிற்கின்ற நிலையைக் காண 4000 கண்கள் தேவை என்று உணர்ந்து பாடியுள்ளார் அருணகிரிநாதர். அவ்வளவு அழகான சிலா ரூபம்.
இது வெள்ளைப் பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளிபடாதது. அடியில் சதுர பீடம் இருக்கும். சுவாமியின் நெற்றியில் பள்ளம். அதன் மீது சந்தனத்தை அப்பி இருக்கிறார்கள்.
திலகமாக ஜடாமகுடம் விளங்க இடக்கையில் சேவல் கொடியோடும் உடன் வள்ளி தெய்வானையோடும் அருள்பாலிக்கிறார் செங்கோட்டு வேலவர்.
சன்னதி முன்பு ஒருபுறம் விநாயகர் மறுபுறம் அருணகிரிநாதர், நக்கீரர் என தெய்வீகமாய் இருக்கிறது செங்கோட்டு வேலவர் சன்னதி.
மண்டப தூண்களின் சிற்பக் கலை வேலைப்பாடுகள் சிறப்போடு அபாரமாக இருக்கும். வீரபத்திரர், அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரி வடிவங்கள் தத்ரூபமாக இருக்கும்.
![]() |
| செங்கோட்டு வேலவர் சன்னதி |
அர்த்தநாரீஸ்வரர் சன்னதி
திருக்கோயிலே அர்த்தநாரீஸ்வரர் தலமாகும். அர்த்தநாரீஸ்வரரே மூலவர். 6 அடி உயரமுள்ள உளிபடாத சுயம்புத் திருமேனி. மூலவரின் உருவ அமைப்பு அற்புதமாக இருக்கும். முழு வடிவமும் வெள்ளை பாஷாணத்தால் ஆனது. மாதொருபாகனாய்க் காட்சியளிக்கிறார் சிவபிரான்.
ஒரு பாதி புடவை. ஒரு பாதி வேஷ்டி அலங்காரம்.
ஆண் பாகத்தில் வலது கையில் தண்டாயுதம் உள்ளது. பெண்பாகத்தில் கொங்கை, திருவடி ஒன்றில் சிலம்பு மற்றொன்றில் கழல் காணப்படுகிறது.
இறைவன் இறைவி கலந்த திருவுருவத்தில் ஆண் பெண் வேறுபாடு சிறப்பாக இருக்கும். குறிப்பாக கண்கள் கூட மயிரிழை வித்தியாசத்துடன் காணப்படும்.
அர்த்தநாரீஸ்வரர் திருவடியின் கீழ் பார்வதி தேவி கேதார கௌரி விரதம் இருந்து பூசித்த மரகத லிங்கமும் பிருகு முனிவர் சிலையும் உள்ளது.
திருவடியில் குளிர்ந்த தேவ தீர்த்தம் சுரக்கிறது. இதுவே இச்சன்னதியில் வழங்கப்படும் பிரசாதம்.
ஆச்சரியம் என்னவெனில் சன்னதிக்கு முன் வாசல் இல்லை. 9 துவாரங்கள் கொண்ட கல்லால் ஆன பலகணி இருக்கும். சன்னதி மேற்கு நோக்கி இருக்கும்.
ஆதிகேசவப் பெருமாள் சன்னதி
ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவும் திருச்செங்கோடு வந்து சிவபிரானை வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணுவே ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் இத்திருத்தலத்தில் குடி கொண்டுள்ளார்.
ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனிச் சன்னதியில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இச்சன்னதி நம்மாழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்டது.
ஆமை மண்டபம்
கோயிலில் இருக்கும் ஆமை மண்டபம் சிறப்பு வாய்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகள் ஆமை மண்டபத்தின் கீழ் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இக்கோயிலில் நாரிகணபதி சன்னதி, நாகேஸ்வரர் சன்னதி முதலானவை உள்ளன.
புராணக் கதைகள்
திருச்செங்கோடு தொடர்புடைய பல புராணங்களும், இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களும், கர்ண பரம்பரைக் கதைகளும் உள்ளன.
நாகமலை உருவான புராணம்
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் ஏற்பட்ட அகந்தை காரணமாக இருவரில் யார் வலியவர் என நிரூபிக்க ஒரு போர் ஏற்பட்டது.
மேரு மலையை ஆதிசேஷன் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். வாயு தேவன் தன் திறனால் நாக தேவனின் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று போர் முறை வகுக்கப்பட்டது.
அதுபோது அண்ட சராசரங்களும் அவற்றில் இருந்த உயிரினங்களும் ஏனைய அனைத்தும் நிலை பெயர்ந்து தட்டுத் தடுமாறின.
தேவர்கள் அவர்களிடம் ஓடி மன்றாடினர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்ற ஆதிசேஷன் கொஞ்சம் தளர்வாக இருக்க, அதைச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்ட வாயு தேவன் பலமாக பெரும் ஓசையுடன் மோதினான்.
மேருமலையின் ஒரு சிகரமும் ஆதிசேஷனுடைய சிரங்களில் ஒன்றும் வானிலே எழுந்து ஒன்றோடு ஒன்று உறைந்து தென்திசை நோக்கிப் பறந்தன. மேருவின் சிகரம் ஆதிசேஷனின் செந்நீர் படிந்து செந்நிறமாக மாறியது.
அது மூன்று பாகங்களாகச் சிதறி விழுந்து ஒன்று இலங்கையாகவும், மற்றொன்று திருவண்ணாமலையாகவும், இன்னொன்று திருச்செங்கோடு நாகமலையாகவும் உருவானது.
இதுவே நாகமலை உருவான புராண வரலாறு.
அகத்தியர் சுட்டிய மலை
மேருமலையின் கொடுமுடியுடன் பொருந்திய சிவலிங்கத்துடனே நாகதேவனின் அங்கமும் சேர்ந்து விழுந்து அமைந்த போது பார்ப்பதற்கு இம்மலை இரு நாகங்கள் புணர்வதைப் போல் இருந்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் தான் அகத்தியர் பெருமான் தென்புலமும் வடபுலமும் சமநிலை பெற இறைவன் ஆணைப்படி தென் திசை வந்தார்.
அகத்தியரின் வருகையை அறிந்த கோதை முனிவர் இரு நாகங்களும் பிணைந்து நிற்பது தீதிற்கு அறிகுறி என நினைத்து அவைகளைக் கல்லாகும்படி சாபமிட்டார் என்கிறது புராணம்.
காமதேனு உருவாக்கிய மலை
ஒரு காலத்தில் காமதேனு கயிலாய நாதரை அணுகி "உங்களை வழிபடுமாறு ஒரு தெய்வத்தலம் கூறி அருள வேண்டும்" என்று கேட்டது.
"காமதேனுவே...! எமது ஐந்து நாடிகளாய் மேருவுக்கு ஒப்பானவைகளாய் ஐந்து சிகரங்கள் மாமேருவில் உள்ளன. அவற்றை எடுத்துச் சென்று தென்னகத்தில் வைத்து எம்மை ஆவாகனம் செய்து வழிபடுவாயாக!" என்று பணித்தார்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காமதேனு ஐந்து கொடுமுடிகளையும் பெயர்த்துக் கொண்டு தென்னகம் வந்தது.
காமதேனுவால் தனஞ்சய நாடிக் கொடுமுடி நாட்டப்பட்ட இடம் கஞ்சமலை. கிருகர்த்த நாடிக் கொடுமுடி நாட்டப்பட்ட இடம் புட்பகிரி. கூர்ம நாடிக் கொடுமுடி நாட்டப்பட்ட இடம் சங்ககிரி . தேவதை நாடிக் கொடுமுடி நாட்டப்பட்ட இடம் நன்னாமலை.
இடப நாடிக் கொடுமுடி நாட்டப்பட்ட இடமே நாகமலை என்னும் திருச்செங்கோடு.
இவ்விதம் காமதேனுவால் நாட்டப்பட்டது பெண் நாகச் சிகரம்.
இச்சம்பவத்திற்கு முன்னர் நடந்த ஆதிசேஷன் உடனான போரில் வாயு தேவனால் சிதறடிக்கப்பட்டு விழுந்தது ஆண் நாகச் சிகரம்.
இவ்விரண்டும் சிவனும் உமையும் போல் இணைந்து நாக மலையாய் திருச்செங்கோடு விளங்கி வருகிறது என்கிறது புராணம்.
இப்போது கூட ஒரு புறத்தில் இருந்து பார்த்தால் திருச்செங்கோடு மலை ஆண் போலவும் இன்னொரு புறத்தில் பெண் போலவும் இருக்கக்
காணலாம்.
பார்வதிதேவி சிவனிடம் பெற்ற இடப்பாகம்
மாம்பழப் பிரச்சனையில் கோபத்துடன் பிரிந்து சென்ற மகன் முருகனை நினைத்து நினைத்து பார்வதி தேவி மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கவே, ஆறுதல் அளிக்கும் வகையில் சிவபிரான் பார்வதி தேவியை அழைத்துக்கொண்டு இயற்கை எழில் மிக்க ஒரு வனத்திற்குச் சென்றார்.
வனத்தில் முல்லைக்கொடி ஒன்று ஒரு மாமரத்தை சுற்றி படர்ந்து இருப்பதைக் கண்ட பரமன் அதை உமைக்குச் சுட்டிக்காட்டினார்.
அதைப் பார்த்த பார்வதி தேவி மாமரத்தைத் தலைவனாகவும் முல்லைக்கொடியைத் தலைவியாகவும் பாவித்து, படர்ந்து இருக்கும் நிலையை ரசித்து வெட்கப்பட்டு பரமனின் கண்களை மறைத்தார்.
இதனால் பரமனின் இரு கண்களாக விளங்கும் சூரியனும் சந்திரனும் மறைக்கப்படவே உலகை இருள் கவ்வியது.
அக்கணமே உலகின் அனைத்து செயல்களும் ஸ்தம்பித்து அப்படியே அசையாது நின்றன. தவ யோகிகளும் முனிவர்களும் தத்தம் செயல்களைத் தொடர முடியாமல் அஞ்சி நின்றனர். இறை பணிகளும் மறையோதுதலும் நின்று போயின.
முனிவர்களும் யோகிகளும் உடனே சிவபெருமானை அணுகி பிரபஞ்சமே இயங்காத இருள் நிலை குறித்து முறையிட்டனர்.
அப்போது சிவபெருமான் பார்வதியைப் பார்த்து "பார்த்தாயா தேவி! நீ எனது கண்களை மூடியதால் படைத்தல் முதலான அத்தனை செயல்பாடுகளும் ஒழிந்து போயின. இது நீ செய்த பெரும் பாவம்" என்று கவலையோடு தெரிவித்தார்.
பார்வதி தேவி பயந்து போய் பாவம் நீங்கப் பெற பரமனிடம் வழி கேட்டார்.
"தேவியே, நீ கேதாரத்திலும் காசியிலும், காஞ்சியிலும் தவம் மேற்கோள். பாவம் நீங்கப் பெற காஞ்சியில் நான் உனக்குக் காட்சி தருகிறேன்" என்று பரிகாரம் சொன்னார்.
தானும் தன் கணவரும் இரு வேறு உருவத்தில் இருப்பதால்தானே இப்படி நேர்ந்து விட்டது. அவரில் பாதியாக அவர் இடப்பாகத்தை பெற்று ஒருவரானால் பிரச்சனை வராது என எண்ணிய பார்வதி தேவி கேதாரம் தொடங்கி காசி தொடர்ந்து காஞ்சிக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அருந்தவம் இயற்றி வரலானார்.
அது சமயம் அவர் தவம் இருந்த கம்பையாற்றங்கரையில் நீர் வரத்து பெருகி பார்வதி திருநாட்டுச் செய்து வழிபட்டு வந்த சிவலிங்கத்தை மூழ்கடித்து ஒரு திருவிளையாடல் நடந்தது.
பார்வதி தேவி சிவலிங்கத்தை இறுகக் கட்டித் தழுவிக் கொண்டார். உடனே ஏற்கனவே சொல்லி இருந்தபடி சிவபிரான் காட்சியளித்து சாபம் நீக்கி அருள்பாலித்தார்.
"நீ வேண்டும் வரம் கேள்" சிவபிரான் புன்னகையுடன் கேட்டார்.
தனது நீண்டகால ஆசையான இறைவனின் ஒரு பாகத்தை குறிப்பாக இடப்பாகத்தைத் தந்தருள வேண்டினார் பார்வதி.
"உன் ஆசை நிறைவேற எனது கருணை அவசியம். என் பூரண கருணையைப் பெற நீ திருவண்ணாமலை சென்று தவம் செய். அதுவே என் கருணையைப் பெறுவதற்கான இடம்" என்றார் இறைவிக்கும் இறைவனான கயிலை நாதன்.
திருவண்ணாமலையில் நீள் தவம் செய்த பார்வதி தேவியை இரட்சிக்க வந்த இறைவன் " உனது எண்ணம் நிறைவேற நீ திருச்செங்கோடு சென்று நற்றவம் மேற்கோள். என்னில் பாதியாவாய்" என்று வாக்கருளினார்.
மனம் மிக மகிழ்ந்து திருச்செங்கோட்டிற்கு வந்தார் பார்வதி தேவியார். மூத்த பிள்ளை விநாயகர் ஓடி வந்து வரவேற்றார். உச்சி மலையில் குமரன் முகம் மலர்ந்து தாயை வணங்கி நின்றார்.
அங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து திருமுழுக்கும் பூசையும் செய்து புரட்டாசித் திங்கள் வளர்பிறை அஷ்டமி திதியில் அன்னை தன் விரதத்தைத் துவக்கினார்.
கருணைக் கடவுள் அன்னையின் தவத்தை மெச்சி புரட்டாசித் திங்கள் தேய்பிறை சதுர்த்தி அன்று காட்சியளித்து பார்வதி தேவிக்கு தம்முடைய இடப்பாகம் கொடுத்தருளினார்.
அன்று தொடங்கி திருச்செங்கோட்டில் நின்ற நிலையில் அர்த்தநாரீஸ்வரராய் மாதொருபாகனாய் அருள்பாலித்து வருகிறார்.
பார்வதி தேவி மேற்கொண்ட விரதமே கேதார கௌரி விரதமாக 21 நாட்கள் இன்று வரை பெண்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு கோலாகல விழாவாக தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது எனினும் இத்தலத்தில் நடைபெறும் விழா ஆன்மிகச் செறிவு மிக்கது.
![]() |
| கேதார கௌரி விரதம் |
பிரிங்கி (பிருகு) முனிவர்
புராண காலத்தில் ஒருமுறை கயிலாயத்தில் முழுமுதற் கடவுளான சிவபிரானும் உலக மாதாவான உமாதேவியும் மேன்மை மிக்க சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர்.
பிருங்கி என்னும் முனிவர் சிவன் பால் மட்டும் பக்தி கொண்டவர். சிவனை மீறிய சக்தி ஏதுமில்லை என்ற நம்பிக்கை கொண்டவர். எனவே அவர் சிவபிரானை மட்டும் வணங்கி நின்றார்.
பார்வதி தேவியாருக்கு இச்செயல் ஆச்சரியத்தை விளைவிக்கவே "எதற்காக பிரிங்கி முனிவர் என்னைப் புறக்கணித்து தங்களை மட்டும் வணங்குகிறார்?" என்று கேட்டார்.
பரமசிவன் புன்னகைத்து "சக்தியும் சிவமும் ஒன்றே என்பதை அறியாது வேற்றுமை பாராட்டி வணங்குகிறான்" என்று பதில் சொன்னார்.
இனி எக்காலத்திலும் யாரும் இப்படி வழிபடக்கூடாது என்று எண்ணிய பார்வதி தன் விருப்பத்தை இறைவனிடம் சொல்ல இருவரும் ஒன்றி இடைவெளி அற்ற நிலையில் நெருங்கி அமர்ந்து காட்சியளித்தனர்.
அப்போதும் பிருங்கி முனிவர் தன் இறைக் கொள்கையை மாற்ற விரும்பாது வண்டு உருவம் எடுத்து சிவனின் தலைப் பகுதியை மட்டும் வலம் வந்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினார்.
இச்செயல் உலகையே கருணையுடன் இரட்சிக்கும் உமையவளுக்குக் கோபமூட்டியது. பிருங்கி முனிவர் நிலை குலையும்படி அவர் உடலில் இருந்த சக்தி முழுவதையும் திரும்ப எடுத்துக் கொண்டார்.
அக்கணமே செயலிழந்து போன பிருங்கி முனிவர் வலுவின்றிக் கீழே சாய்ந்தார். தன் அணுக்க பக்தன் கீழே சாய்வதைக் கண்ட பரமன் தன் அருளால் இன்னொரு காலை வழங்கி முனிவரின் தடுமாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார்.
"நான்மறை அறிந்த முனிவரே! சக்தி இல்லையேல் சிவமில்லை என்பதை ஏன் உணர மறந்தீர்? " என்று ஆரம்பித்து மெய்ப்பொருளை விளக்கினார் மெய்யழகர்.
பிருங்கி முனிவர் அம்மையப்பனின் மெய்ப்பொருளை முழுதுமாக உணர்ந்து இறைவனையும் இறைவியையும் வலம் வந்து சக்தியின் ஆசியையும் பெற்று சக்தியோடு வணங்கி நின்றார்.
பிரம்மா விஷ்ணு
முதுகையிடபர், இரணியன், இரண்யாட்சன் ஆகியோரைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்ள திருமால் திருச்செங்கோட்டிற்கு வந்து அம்மையப்பரை வழிபட்டு பழி பாவங்களை நீக்கி நலம் பெற்றுக் கொண்டு சென்றதாகப் புராணம் கூறுகிறது.
இது போன்று இறைவன் திருமுடியைக் கண்டதாகப் பொய் சொல்லி ஒரு தலையை இழந்ததோடு 'உலகில் அவருக்கென கோயில் இல்லாமல் போகட்டும்' என இறைவனிடமே சாபம் பெற்ற பிரம்மா இத்தலத்திற்கு வந்து அம்மையப்பரை வணங்கி மனக்குறையைப் போக்கிக் கொண்டதாகப் புராணம் புல்லரிக்க வைக்கிறது.
திருவிளையாடல்கள்
கல் இடபம் கடலை தின்ற வரலாறு
திருவாவடுதுறை சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு சைவ நெறிச் செம்மல்.
ஒருமுறை சுவாமிகள் அடியார் திருக்கூட்டத்தோடு திருச்செங்கோடு வருகை புரிந்தார்.
தில்லைவாழ் அந்தணரின் ஆணைப்படி தில்லை வாழ் அந்தணர்களால் அளிக்கப்பட்ட சாமரம், ஆலவட்டம், இடபத்தடி முதலான சின்னங்களுடன் பல்லக்கில் அமர்ந்து அமர்க்களமாக திருச்செங்கோடு வந்த சுவாமிகளை ஒரு சிலர் அவரைச் சூத்திரர் என்று சுட்டிக்காட்டி சிவிகையில் செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
சுவாமிகள் புன்னகைத்தபடி சிவிகையில் இருந்து இறங்கி கால்நடையாகப் பயணம் தொடரலானார்.
இது அறிந்த திருச்செங்கோடு நகர சிவனடியார்கள் மனம் கலங்கி தடுத்த கூட்டத்தாரிடம் திருவாவடுதுறை திருமடத்தின் சிறப்புகளையும் அருமை பெருமைகளையும் எடுத்துக் கூறினர். அப்போதும் அவர்கள் ஏற்கவில்லை.
அவர்களில் ஒருவர் "மகத்துவம் மிக்கவர் என்று சொல்கிறீர்களே, அது உண்மையானால் கோயிலில் சுவாமி முன்னுள்ள கல்லாலான இடபம் எழுந்து வந்து நாங்கள் இடும் கடலையை உண்ணச் செய்வாரா?" என இகழ்ச்சியுடன் சத்தமாக வினவினார்.
சுவாமிகளோ, "யார் புகழ்ந்தால் என்ன, இகழ்ந்தால் என்ன?" என்று நினைத்து மறுத்துவிட்டார்.
சிவனடியார்கள் சுவாமிகளை வற்புறுத்தி, தூற்றியவர்கள் மனநலம் பெற்று மெய்சிந்தனையுடன் நற்பேறு பெறுவதற்கேனும் நந்தியை எழுந்து கடலையை உண்ணச் செய்யுமாறு
வேண்டினர்.
அவர்கள் வேண்டுகோளை மறுக்காத சிவப்பிரகாச சுவாமிகள் உமையொரு பாகனை உள்ளம் நெகிழ வணங்கி 'வில்லார் பொதுச் சபையில்....' என்னும் வெண்பாவைப் பாடினார்.
அவ்வளவுதான்! அடுத்த கணமே கல் இடபம் உயர்ந்து ஓங்காரமிட்டு எழுந்து முன் வைக்கப்பட்டிருந்த கடலையைத் தின்றுவிட்டு முன்பிருந்தபடி கல்லாய் அமர்ந்தது.
அந்நிகழ்வைக் கண்டவர் எல்லாம் வியந்தனர். இகழ்ந்து தடுத்தவர்கள் தம்மை அறியாது கை கூப்பினர். சிவபிரானின் பேரன்புக்குப் பாத்திரமான அணுக்கத் தொண்டர் சிவப்பிரகாச சுவாமிகளின் பேராற்றலைப் போற்றி காலடி விழுந்து வணங்கினர்.
இத்தெய்வீக நிகழ்ச்சி ஆணவத்தால் அறிவிழந்து ஏசிய கூட்டத்திற்கு அர்த்தநாரீஸ்வரரே சொன்ன உயர்ந்த செய்தியாகும்.
ஊமையைப் பேச வைத்த உமையொரு பாகன்
கொங்கு மண்டலத்தில் காடம்பாடி என்ற ஊரில் வாழ்ந்து வந்த பக்தர்கள் பாததூளி- சுந்தரி அம்மாள் தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.
செல்வந்தரான அவர்கள் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. பலனும் இல்லை.
அவர்கள் திருச்செங்கோடு தலத்தைப் பற்றி ஆன்றோர் சிலர் கூறக் கேள்விப்பட்டு திருத்தலத்திற்கு வந்து இறைவனைச் சரணாகதி அடைந்தனர்.
சிவபிரானின் திருவிளையாடல் இனிது தொடங்கியது.
இறையே திருவுளம் கொண்டு அவர்களுக்குப் புத்திர பாக்கியம் வழங்கினார். உரிய காலத்தில் அவர்களுக்கு ஆண் மகவு பிறந்தது. மகனுக்கு உமைபாகன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.
ஆனாலும் ஆனந்தம் கூத்தாட வேண்டிய அவர்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் துயரமே தொடர்ந்தது.
காரணம், பிறந்த குழந்தை மழலைச் சொல் பேசவில்லை. ஊமையாய் இருந்தது. பாததூளி தம்பதியினர் கண்ணீருடன் திருச்செங்கோடு உறையும் கடவுளை மீண்டும் நாடினர். கதறி அழுது வேண்டி நின்றனர்.
அந்தக் காலகட்டத்தில் கீழ்கரை பூந்துறை நாட்டில் ஏமப்பள்ளி என்னும் ஊரில் வாழ்ந்து வந்த ஒரு சிவனடியார் கனவில் அம்மையப்பன் காட்சியளித்தார்.
"அன்புமிகுந்த வேலப்பரே! நீ திருச்செங்கோட்டுக்கு வந்து எமக்குப் பணி செய்து வாழ்வாயாக!" என்று ஆணையிட்டார்.
மிகவும் மகிழ்ந்த வேலப்பர் திருச்செங்கோடு வந்து பல இறைபணிகள், திருப்பணிகள் செய்ய ஆரம்பித்தார். இறைவன் எழுந்தருளும் பொழுதெல்லாம் சாமரம் வீசுவது அவருக்கு மிகவும் பிடித்துப் போன திருப்பணி.
வேலப்பர் சாமரம் வீசும் பாங்கைக் கண்டு அனைவரும் வியந்தனர். அவரை 'சாமர வேலப்ப பூபதி' எனப் போற்றினர். அந்தத் திருநாமமே அவருக்கு நிலைத்தும் போயிற்று.
இப்போது பாததூளி தம்பதியினர் கதைக்கு வருவோம்.
பலமுறை பலவாறு வேண்டியும் இறைவன் கண் திறந்து ஊமைக் குழந்தையைப் பேச வைக்காதிருந்தது கண்டு மனம் நொந்த பெற்றோர்
இறைவனிடமே குழந்தையைச் சேர்த்து விடலாம் எனத் தீர்மானித்து அதற்கு ஒரு நாள் குறித்தனர்.
அது வைகாசி விசாகத் திருநாள்.
அன்று நடந்த தேரோட்டத்தின் போது ஓடும் தேரின் சக்கரத்தின் கீழ் பிள்ளையை வைத்துவிட்டு அப்பால் அழுது கொண்டே சென்று விட்டனர் பெற்றோர்.
இதைத் தேரில் இருந்தவாறு கண்ணுற்ற சாமர வேலப்ப பூபதி பதறிப்போனார்.
தேரிலிருந்து குதித்து ஓடி வந்து தேர்ச் சக்கரம் முன் நின்று "அப்பனே! ஒப்பிலாமணியே! உன் நோக்கம் நான் அறியேன். நல்லதற்காகத்தான் இருக்கும்.
ஆனாலும் குழந்தையைக் காப்பது எனது கடமை என எனக்குள் உன் குரல் கேட்கிறது.
குழந்தை தேர்க்காலில் நசுங்கி சாகத்தான் வேண்டுமெனில் இதோ நானும் என் தலையைத் தருகிறேன்" என்றவாறு உருண்டு வரும் தேர்ச்சக்கரத்தை நெருங்கினார்.
அந்தோ! தேர் குழந்தையின் மீதேறிக் கடந்துவிட்டது.
பதறிய வேலப்பரும் பக்கத்தில் இருந்தோரும் கண்மூடி கண் திறந்து பார்த்தபோது குழந்தை அன்றலர்ந்த தாமரை போல் புதிதாய்ப் பூத்திருந்தது.
புன்னகை பூத்த அக்குழந்தை உதடு குவித்து சிரித்துச் சிணுங்கி மழலை பேசியது. அக்குரல் அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் தேனாய்ப் பாய்ந்தது.
நடந்தவற்றைக் கண்டு கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் தேரில் இருந்த அம்மையப்பரை நோக்கி இரு கை கூப்பி வணங்கி வியந்தனர்.
சாபம் நீக்கிய அர்த்தநாரீஸ்வரர்
ஒரு சமயம் சயங்கல நாட்டு மன்னன் சிங்கவன்மன் வேட்டையாட ஒரு பன்றியைத் துரத்தி வந்தபோது பிருகு முனிவர் அப்பன்றிக்கு அபயம் அளித்தார்.
அதைப் பொருட்படுத்தாத சிங்கவன்மன் பன்றியைக் கொன்றான். அதனால் பிருகு முனிவரின் சாபத்தையும் பெற்றான்.
பற்பல சிவத்தலங்களை வழிபட்டும் சாபம் நீங்கப் பெறாத அம்மன்னன்
ஆன்றோர் சொல்கேட்டு இறுதியில் வந்து நின்று தொழுத தலம் திருச்செங்கோடு.
அர்த்தநாரீஸ்வரர் அபயம் அளித்து பிருகு முனிவரை மன்னிக்கச் செய்து
மன்னனின் சாபத்தை நீங்கச் செய்தார்.
ஒருமுறை பாண்டிய வளநாடு மழை இல்லாமல் பாலைவனமாகிப் போனது. பாண்டிய மன்னன் இத்திருத்தலத்திற்கு வந்து அர்த்தநாரீஸ்வரரையும் செங்கோட்டு வேலவரையும் வழிபட்டு நாடு செழிக்கக் கண்டதாகக் குறிப்பு உள்ளது.
செங்கோட்டு வேலவரின் திருவிளையாடல்
அம்மையப்பனைப் போலவே அவர்களிருவரின் அருளால் மகனாய் அவதரித்த முருகப்பெருமானின் திருவிளையாடல்களும் சிறப்பு மிக்கன.
பாண்டிய நாட்டில் தாமிரபரணி தீரத்தில் குருகூர் (ஆழ்வார் திருநகரி) என்று ஓர் ஊர்.
இங்கு 'பிரதிவாதி பயங்கரன்' என்ற காரணப்பெயர் கொண்ட முத்தமிழ் அறிஞன் வாழ்ந்து வந்தான்.
அவன் பல அரசவைகளுக்குச் சென்று அங்கிருக்கும் புலவர்களை தன் அறிவாற்றலால் மட்டம் தட்டி அரசர்களிடம் பரிசில் பெற்று அப்புலவர்களின் வயிற்றில் அடித்து வருவதையே வாழ்வியலாகக் கொண்டிருந்தான்.
திருச்செங்கோட்டில் குணசீலர் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபிரானுக்கும் அகத்தியர் பெருமானுக்கும் பாடம் சொன்ன முருகப்பெருமானின் திருவருள் நிரம்பப் பெற்றவர்.
திருச்செங்கோட்டிற்கு வருவதற்கு முன்னரே பிரதிவாதி பயங்கரன் குணசீலரை வாதாட அழைத்தான்.
குணசீலர் செங்கோட்டு வேலவரை வேண்டி நின்றார். அன்று இரவு கனவில் வந்த வேலவர் "கவிதை வல்ல அன்பனே! உன்னைக் காத்தருள்வேன். துயர் விடுக" என அருள்வாக்கு தந்தார்.
பிரதிவாதி பயங்கரன் பல்லக்கில் பவனி வந்து திருச்செங்கோடு எல்லையை அடைந்தான். தனக்கு முன்னே இருக்கும் மலை, பாம்பின் வடிவமாய் இருந்ததைக் கண்டு வியந்து கலித்துறை வகையில் பாடல் பாட ஆரம்பித்தான்.
அவனுள் இருந்து இரண்டு வரிகளே வந்தன. அடுத்த அடி பாட முடியாமல் யோசித்து யோசித்து திண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் சர்வ சாதாரணமாக அடுத்தடுத்த அடிகளை எடுத்துச் சொல்லி பாடலை முடித்து வைத்தான்.
வியந்த பயங்கரன் "நீ யார்?" எனக் கேட்க "குணசீலர் என்ற புலவரின் கடை மாணவன்" என்றான் மாடு மேய்க்கும் அந்தச் சிறுவன்.
பயந்து போன பிரதிவாதி பயங்கரன் கடை மாணவனே இப்படிப் பாடுகிறானே என வியந்து தன் கவித்திறனில் அச்சம் கொண்டு எடுத்தான் ஓட்டம்.
இதைக் கேள்விப்பட்ட சிலர் விரைந்து வந்து பார்த்தபோது சிறுவனும் இல்லை. மாடுகளும் இல்லை. மறைந்து போயிருந்தனர்.
இவ் விஷயத்தை அவர்கள் ஓடி வந்து குணசீலரிடம் சொல்ல அவர் செங்கோட்டு வேலவரின் மகத்துவத்தை உணர்ந்து மலைக் கோயிலுக்கு விரைந்து செங்கோட்டு வேலவரை வணங்கி மகிழ்ந்தார்.
வேலவரின் விளையாட்டு என்றால் சும்மாவா? தந்தை பத்தடி பாய்ந்தால் மகன் பல்லாயிரம் அடிகள் பாய மாட்டாரா, என்ன!
பிரார்த்தனைகள் பரிகாரங்கள்
கணவன் மனைவி ஒற்றுமை, நாக தோஷம், ராகு தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் முதலானவற்றிற்கு இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து வஸ்திரங்கள் வழங்கி நேர்த்திக் கடனைச் செய்கிறார்கள்.
அர்த்தநாரீஸ்வரருக்கு எல்லா சதய நட்சத்திரத்திலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.. சதய நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய திருக்கோயில் இது.
விசேஷ மற்றும் அமாவாசை நாட்களில் முழு நேரமும் நடை திறந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு.
திருவிழாக்கள்
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகப் பெருந்தேர்த் திருவிழா, நடராஜர் திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, கேதார கௌரி விரதம் மற்றும் நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், படித்திருவிழா, சிவராத்திரி, மாசி மகம் விழா,
உத்திர விழா.
இவற்றில் விசாகப் பெருந்தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
![]() |
| அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா |
கிரிவலம்
திருச்செங்கோடு மலையைக் கிரிவலம் வருவது மிகுந்த நன்மை தரும். கிரிவலப் பாதை 7 கி.மீ தூரம் கொண்டது.
இம்மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
அருகில் உள்ள சிவன் கோயில்
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுடன் தொடர்பு கொண்ட திருக்கோயில்.
இங்கு கைலாசநாதர் இறைவி சுகந்த கூந்தலாம்பிகை என்னும் ஏலவார் குழலம்மையுடன் அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் பள்ளிகொண்ட பெருமாள் தரிசனம் அருள்கிறார்.
இங்கு நந்தீஸ்வரருக்கு சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தனி நந்தி மண்டபம் உள்ளது. இங்குள்ள நந்திகூபம் வழியாக கோயில் கிணற்றுக்குச் செல்லும் படிகள் காணத்தக்கது.
நந்தி தேவாரம்
திருச்செங்கோடு திருத்தலப் பெருமையை ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீட நிறுவனர் சுவாமி சித்தகுருஜி வாயிலாக நந்தீஸ்வரர் நந்தி தேவாரமாக வெளிப்படுத்தி உள்ளார்.
கையும் நடுங்க காலும் தளர கடுமூச்சிறைக்க
மெய்யும் சரிய விழியும் சொருக பேச்சு நிற்க
பொய்யும் புழுகும் ஆன நெஞ்சு நினைப்பிழக்க
உய்யும் வழியறியா உயிர் உள் ஊசலாட
ஐயும் கவிழ் நேரம் கொடிமாட செங்குன்றூரானை
செய்யும் நினைப்பால் சிவகதி கிட்டுமாமே
அமைவிடம்
ஈரோட்டில் இருந்து 18 கி.மீ, சேலத்தில் இருந்து 45 கி.மீ, நாமக்கல்லில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது திருச்செங்கோடு.
திருச்செங்கோடு நகரில் நாமக்கல் செல்லும் சாலையில் 1/2 கி. மீட்டர் தொலைவில் மலைச்சாலை நுழைவு வாயில் உள்ளது.
மலை மீது இருக்கும் கோயில் அருகிலேயே செல்ல இங்கு சாலைப் போக்குவரத்து உள்ளது.
விமான நிலையம்/இரயில் நிலையம்
கோவை மற்றும் சேலம் விமான நிலையம்
திருச்செங்கோடு இரயில் நிலையம்
கூகுள் மேப்
முகவரி
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211, நாமக்கல் மாவட்டம்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

.jpg)
.jpg)








Comments
Post a Comment